பத்திரப் பதிவுத்துறையில் 2017ஆம் ஆண்டு வழிகாட்டி மதிப்பை பயன்படுத்த வேண்டும்: தலைவர் அண்ணாமலை!

பத்திரப் பதிவுத்துறையில் 2017ஆம் ஆண்டு வழிகாட்டி மதிப்பை பயன்படுத்த வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜனவரி 17ஆம் தேதி அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில், யாரிடமும் கலந்தாலோசிக்காமல், பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டறியாமல், சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பு உயர்வை சுமார் 50 சதவீத அளவுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் மாநில அரசு அமல்படுத்தியது. இதனால் பொதுமக்களும், கட்டுமான நிறுவனங்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரெடாய் மற்றும் சில கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், சட்டவிதிகளின் படி, துணைக் குழுக்களை அமைத்து, அவற்றின் அறிக்கைகளை ஆய்வு செய்து, பொதுமக்களின் கருத்துகளையும் கேட்ட பிறகே வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க வேண்டும் என்றும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் தமிழக அரசு பிறப்பித்த வழிகாட்டி மதிப்பு உயர்வு அறிக்கை சட்டவிரோதமானது என்றும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றி புதிய வழிகாட்டி மதிப்பை அறிவிக்கும் வரை, 2017ஆம் ஆண்டு அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பையே பின்பற்ற வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால், தமிழக அரசு உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் தொடர்ந்து கூடுதல் கட்டணத்தை வசூலித்து வருகிறது. தொடர்ந்து பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த பின்னரும் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதன் நோக்கம் பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

எனவே, பத்திரப்பதிவுத் துறையில் 2017ஆம் ஆண்டு வழிகாட்டி மதிப்பையே திமுக அரசு பயன்படுத்த வேண்டும். நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக இத்தனை நாள்களாக வசூலித்த கூடுதல் கட்டணத்தை, பொதுமக்களுக்குத் திருப்பித் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top