திமுக எம்.எல்.ஏ., வீட்டில் பட்டியலின இளம்பெண் நிர்வாணப்படுத்தி சித்ரவதை!

பல்லாவரம் தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோவின் வீட்டில் வேலை பார்த்து வந்த பட்டியலின இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்துள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தம்பதியின் 18 வயதான மகள், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ஏஜெண்ட் ஒருவர் மூலமாக சென்னை திருவான்மியூரில் உள்ள பல்லாவரம் தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் வீட்டுக்கு வேலைக்கு சென்றிருக்கிறார். அங்கு அந்த இளம்பெண் பல்வேறு கொடுமைகளைச் சந்தித்ததாகப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக டி.ஜி.பி-யிடம் இளம்பெண் அளித்துள்ள புகாரில், ‘‘ஒருநாள் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை மர்லினா என்னை அடித்தார். எனக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் கத்தரிக்கோலை கொண்டு என் முடியை வெட்டிவிட்டுத் தாக்கினார். இதனால் கடும் காயங்கள் ஏற்பட்டது. என் கைகளை தூக்கச் சொல்லி குழம்பு கரண்டியை கொண்டு மர்லினா என் மார்பில் அடிப்பார். என்னை கீழே படுக்கவைத்து, என் முகத்தில் செருப்பு காலால் எட்டி உதைப்பார். இரண்டு கைகளிலும் கன்னத்திலும் தாடையிலும் சூடு வைத்துள்ளார். ஒருநாள் ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக்கி, என்னை கடுமையாக தாக்கினார். ஆண்டோ மதிவாணனும் என்னை இரண்டு முறை அடித்திருக்கிறார். ஒருமுறை ஆண்டோ தன்னுடைய மனைவி மெர்லினாவிடம், ‘நீ அந்த நாயை என்ன வேண்டுமானாலும் செய்துகொள். ஆனால், என் குழந்தை முன்னால் அடிக்காதே, அதனால் நம் குழந்தை பாதிக்கப்படுகிறது’ என்று கூறினார். அன்று முதல் அவர்களுக்கு இடையே பிரச்னை வந்தது. அதற்கும் நான்தான் காரணம் என்று கூறி, மர்லினா என்னை கடுமையாக அடித்து சித்ரவதை செய்தார். கடந்த எட்டு மாதங்களாக நான் அடிவாங்காத நாட்களே கிடையாது.

தினமும் என்னை அடித்து துன்புறுத்தினார். ‘நீயும் உன் அம்மாவும் ரெட் லைட் ஏரியாவிற்குச் சென்றால், நன்றாக சம்பாதிப்பீர்கள்…’ என்று கூறி, இழிவுபடுத்தினார். என்னை மோசமான வார்த்தைகளாலும், சாதிரீதியாகவும் மிகவும் இழிவாகப் பேசினார். கடந்த 12-ம் தேதி துணி காய வைக்கவில்லை என்று கூறி, குழம்பு கரண்டியால் வலது கண் நெற்றி தலைப்பகுதியில் கடுமையாக தாக்கினார்.

இதனால் எனக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. என்னை படிக்க வைப்பதாகக் கூறி பத்து, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை மர்லினா வாங்கி வைத்துள்ளார். அதை எனக்குப் பெற்றுத் தர வேண்டும். அவர்கள் இருவர்மீதும் பட்டியல் சாதியினர்/ பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கு தகுந்த நீதி, நிவாரணம் மற்றும் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமூக நீதி என பாடம் எடுக்கும் திமுக, தற்போது சொந்த கட்சி எம்.எல்.ஏ. வீட்டில் பட்டியல் சமுதாய பெண் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

இந்த விஷயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எதுவும் நடைபெறாததை போல மௌனம் காத்து வருவது விமர்சனத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.  வட மாநிலங்களில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால் இவர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் செல்வார். ஆனால் சொந்த மாநிலத்தில் பட்டியல் சமூதாய பெண் சொந்த கட்சிக்காரர்களின் வீட்டில் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கு குரல் கொடுக்காமல் உள்ளார் என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும், இந்த விஷயத்தில் தமிழக ஊடகங்களும் மவுனம் காத்து வருகின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணே வீடியோ வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அப்பெண்ணுக்கு பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர். உடனடியாக திமுக எம்.எல்.ஏ., குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top