அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் விக்ரகம் நேற்றைய தினம் (ஜனவரி 19) கருவறைக்குள் வைக்கப்பட்டது. கர்நாடக மாநிலம், மைசூசை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ், கறுப்பு நிற கல்லில் செதுக்கிய 200 கிலோ எடை உடைய விக்ரகம் கருவறைக்குள் வைக்கப்பட்டது.
இந்த விக்ரகம் வரும் ஜனவரி 22ம் தேதியன்று மதியம் 12:20 மணிக்கு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. நேற்றைய (ஜனவரி 19) தினம் ராமர் விக்ரகத்தின் மீது புனித தீர்த்தம் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின் கணபதி பூஜை, வருண பூஜை, வாஸ்து பூஜை உள்ளிட்டவை செய்யப்பட்டன. 121 வேத விற்பன்னர்கள் இந்த பூஜையில் பங்கேற்றனர்.
இந்த நிலையில், அயோத்தி ராமர் சிலை 300 கோடி ஆண்டு பழமையான கல்லில் வடிமைக்கப்பட்டது என ஓய்வுபெற்ற புவியியல் பேராசிரியர் சி.ஸ்ரீகந்தப்பா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது; புவியியல் ரீதியாக மைசூரை சுற்றியுள்ள பாறைகள் ஆர்க்கேன் தார்வார் கிராட்டன் என்பதன் ஒரு பகுதியாக உள்ளன. இப்பாறைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஐசோடோபிக் ஆய்வுகள், இவை 300 கோடி ஆண்டுகள் பழமையானவை என்பதை தெரிவித்துள்ளது.
மைசூர் பல்கலைகழகத்தின் புவி அறிவியல் துறையால் கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட புவியியல் ஆய்வுகளின் அடிப்படையில், குழந்தை ராமர் சிலையை செதுக்கப் பயன்படுத்தப்பட்ட பாறை தென்னிந்தியாவின் மிக பழமையான பாறை என்றும், 300 கோடி ஆண்டுகள் பழமையானது என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க அயோத்தி ராமர் குழந்தை முகம் கொள்ளை அழகுடன் காட்சியளிக்கிறார்.