பிறவிப் பயனை அடைந்து விட்டோம், என, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது நடந்த சங்கல்ப பூஜையில் பங்கேற்ற தமிழக தம்பதி ஆடலரசன் – லலிதா பங்கஜவல்லி தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது நடந்த சங்கல்ப பூஜையில் பங்கேற்க பாரதம் முழுவதிலும் இருந்து, 16 தம்பதியர் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் தமிழகத்தை சேர்ந்த ஆடலரசன் – லலிதா பங்கஜவல்லி தம்பதியும் இடம் பெற்றனர். ஆர்.எஸ்.எஸ்., மாநில தலைவரான ஆடலரசன் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் மகள் வழி கொள்ளுப்பேரன்.
ஆடலரசனின் மனைவி லலிதா பங்கஜவல்லி, தற்போதைய ராமநாதபுரம் ராணி ராஜேஸ்வரி நாச்சியாரின் தங்கை.
அயோத்தி அனுபவம் தொடர்பாக ஆடலரசன் -லலிதா பங்கஜவல்லி கூறியதாவது:
கடந்த 20 நாட்களுக்கு முன் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையில் இருந்து, மனைவியுடன் ராமர் கோவில் கும்பாபிஷேக சங்கல்ப பூஜையில் பங்கேற்க வேண்டும் என, அழைப்பு வந்தது. எங்களை போன்று நாடு முழுதும் இருந்து 16 தம்பதியர் பங்கேற்றனர்.
8 தம்பதியர் ஒரு பக்கமும், 8 தம்பதிகள் மறு பக்கமும் அமர்ந்திருக்க நடுவில் பிரதமர் நரேந்தி மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அமர்ந்து முக்கியமான பூஜைகளை செய்தனர்.
சடங்குகள் மற்றும் சங்கல்ப பூஜைகள் முடிந்ததும், கர்ப்பகிரகத்தில் பால ராமருக்கு முதல் பூஜை நடந்தது. அதிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரதமர் நரேந்திர மோடி முதல் ஆரத்தி காட்டினார். அப்போது நாங்கள் உட்பட 16 தம்பதியரும் ஆரத்தி காட்டினோம்.
இராமநாதபுரம் சேதுபதி மன்னர் குடும்பத்திற்கும், ஶ்ரீ ராமருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ராமர் பாலத்தை பாதுகாத்தவர்கள் சேது மன்னர்கள்.
எனவே தான், ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த எங்களை அழைத்து பெருமைப்படுத்தி உள்ளனர்.
ராமர் கோவில் சங்கல்ப பூஜையில் பங்கேற்ற நிகழ்வு, வாழ்வில் யாருக்கும் கிடைக்காத பெரும் பாக்கியம். அப்போது ஏற்பட்ட உணர்வுகளை, மகிழ்ச்சியை, வார்த்தைகளால் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. பிறவிப் பயனை அடைந்து விட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
நானும், என் மனைவியும் பெரும் அதிர்ஷ்டசாலிகள். இது எங்களுக்கு மட்டுமல்ல, ராமநாதபுரத்திற்கும், தமிழகத்திற்கும் கிடைத்த பெருமையாகவே பார்க்கிறேன். அயோத்தியிலிருந்து புதன்கிழமை ராமநாதபுரம் வருகிறேன்.
அரண்மனையில் உள்ள ராமர் கோவிலில் வழிபட்ட பிறகே வீட்டுக்கு செல்ல இருக்கிறோம் இவ்வாறு அவர்கள் கூறினார்.
இராமநாதபுரம் வருகை தரும் ஆடலரசன் தம்பதிகளுக்கு சமூக பெரியவர்கள் சார்பில் இன்று சிறந்த வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.