75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் நேற்று (ஜனவரி 26) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இது போன்று அனைத்து மாநிலங்களிலும் குடியரசு தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தேசத்திற்காக பல்வேறு சாதனைகள் புரிந்தவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியிலும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. மேயர் பிரியா தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அதன்பின்னர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மேயர் பிரியாவிடம் ஒருவர் விருது வாங்க வருகிறார். அப்போது பிரியா செல்போனில் யாரிடமோ சிரித்து, சிரித்து பேசிக்கொண்டிருக்கிறார். சில நிமிடங்கள் பேசிக்கொண்டே ஒரு கையில் விருதை வழங்குகிறார்.
இந்த வீடியோ இணையளங்களில் வெளியாகி கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. இதற்கு பலரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். விருது வழங்கும் நிகழ்வில் இப்படி அநாகரிமான செயலில் ஈடுபடுவது திமுகவிற்கு புதிதல்ல எனவும் நெட்டிசன்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.