ஊழல், ஜாதி அரசியல், அடாவடித்தனம், குடும்ப அரசியல் இவை நான்கும்தான் திமுக அரசின் நாற்காலியை தாங்கும் நான்கு கால்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மண் என் மக்கள் யாத்திரைப் பயணம் நேற்று (ஜனவரி 25) கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதியில் நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மத்திய பாஜக அரசின் சாதனைகள் அடங்கிய பிரசுரங்களை தலைவர் அண்ணாமலை பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி அரசு செய்து வரும் நலத்திட்டங்களையும் எடுத்துக்கூறினார்.
இது தொடர்பாக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
வரலாற்றுப் புகழ் மிக்க, ஆன்மீக புண்ணிய பூமியாகவும் சைவசமயத்தின் கேந்திரமாகவும் விளங்கும் விருத்தாச்சலம் மண்ணில், பொதுமக்களின் பெரும் ஆரவாரத்துடன் சிறப்பாக நடந்தேறியது. சோழப் பேரரசர்களின் ராணுவ மையமாக விளங்கிய நகரம். இங்குள்ள விருத்தகிரிஸ்வரர் கோவிலைக் கட்டியது செம்பியன் மகாதேவியாரின் கணவர் கண்டராதித்த சோழராவார். எல்லா சோழ மன்னர்களும் இந்த கோவிலுக்கு தங்களது சேவைகளை செய்துள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு கடத்திச் செல்லப்பட்ட விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலையை, கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று, ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடி அவர்கள் மீட்டு தமிழகத்துக்குக் கொண்டு வந்தார். அமரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், கடந்த 2006ஆம் ஆண்டு முதன்முதலாக சட்டமன்றத்திற்கு தேர்வாகியது விருத்தாச்சலம் தொகுதியில் இருந்துதான்.
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் 1962ல் ஆரம்பிக்கப்பட்ட விருத்தாச்சலம் பீங்கான் தொழிற்பேட்டை, சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசைத் தொழில் மூலம் வீடுகளில் பீங்கான் பொருள்களைச் செய்து வருகிறார்கள். 300-க்கும் மேற்பட்ட செராமிக் நிறுவனங்கள் உள்ளன. ஒரு நாளைக்கு 10,000 விளக்குகள் குறைந்தபட்சம் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்குத் தேவையான வட்டுகள் பல மாநிலங்களுக்கும், பல்வேறு நாடுகளுக்கும் இங்கிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
திமுக தேர்தலின்போது 511 தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தது. அவற்றில் 20 வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. ஆனால், 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகப் பொய் சொல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு தனி மாவட்டம், விருத்தாசலத்தில் புதிய பேருந்து முனையம், புறவழிச்சாலை வசதிகள், பாலிடெக்னிக் கல்லூரி, சூரியகாந்தி எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை மீண்டும் செயல்பட நடவடிக்கை, மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
ஊழல், ஜாதி அரசியல், அடாவடித்தனம், குடும்ப அரசியல் இவை நான்கும்தான் திமுக அரசின் நாற்காலியை தாங்கும் நான்கு கால்கள். இவற்றை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி, வளர்த்துக் கொண்டிருப்பது திமுகதான். திமுக அமைச்சர்களின் 11 பேர் மீது ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் ஜெயிலிலும், ஒரு அமைச்சர் பெயிலிலும் இருக்கிறார்கள். இன்னும் ஐந்து அமைச்சர்கள் மீது, பாஜக ஊழல் குற்றச்சாட்டு வைத்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுக வாரிசு அரசியல்தான் செய்கிறது. தொண்டர்களுக்கோ, இளைஞர்களுக்கோ திமுகவில் வாய்ப்பு இல்லை. திமுகவில் பதவியில் இருப்பவர்களின் வாரிசுகள் மட்டும்தான் முன்னேற முடியும்.
லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான மனிதர் நமது பிரதமர் மோடி அவர்கள். அவரது தலைமையில், பொருளாதாரத்தில் உலக அளவில் 11ஆவது இடத்தில் இருந்த நமது நாடு, தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஊழலற்ற, குடும்ப அரசியல் இல்லாத மாற்றத்தை, தமிழகத்தில் மக்கள் விரும்புகிறார்கள். பாஜகவால் மட்டும்தான் நேர்மையான, மக்களுக்கான ஆட்சியைத் தரமுடியும் என்பதற்கான எடுத்துக்காட்டுதான் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். வரும் பாராளுமன்றத் தேர்தலில் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்றதும், இந்தியா நன்றாக, வேகமாக, வலிமையாக வளரும். அதற்கு தமிழகமும் இம்முறை துணை நிற்க வேண்டும். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.