உலக அரங்கில் இந்தியாவின் கௌரவம் உயர்ந்துள்ளது: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி முர்மு.!

நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்ற வந்த ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு செங்கோல் ஏந்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. துணை ஜனாதிபதி ஜகதீப் ஜன்கர், சபாநாயகர் ஓம்பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அவரை வரவேற்று அழைத்து வந்தனர். அப்போது பாஜக உறுப்பினர்கள் கைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 31) நடைபெறுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ராஷ்டிரபதி பவனில் இருந்து ஜனாதிபதி திரௌபதி முர்மு பாரம்பரிய முறைப்படி குதிரை வண்டியில் நாடாளுன்றத்திற்கு வந்தார். அவரை துணை ஜனாதிபதியும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இந்த பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும் நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வோம்” என நம்பிக்கைத் தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளை ஒருங்கிணைந்த கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார். அப்போது அரசின் பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்தார். முன்னதாக, நாடாளுமன்றத்தில் நுழைந்த ஜனாதிபதி செங்கோலை ஏந்திச் சென்று வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஜனாதிபதியுடன் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு அவரது உரையில், “பட்ஜெட் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது. முதன்முறையாக நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் உரையாற்றுகிறேன்

இந்த புதிய நாடாளுமன்றம் அமிர்த காலத்தின் துவக்கத்தில் கட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டிடத்தில் கொள்கைகள் குறித்த அர்த்தமுள்ள உரையாடல் இருக்கும் என நான் நம்புகின்றேன். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். அனைத்து கட்சியினரும் ஒத்த கருத்துடன் பயணிப்பார்கள் என நம்புகிறேன்.

ராமர் கோவில் கட்ட வேண்டும் என்கிற பல நூற்றாண்டு கால கனவு நினைவாகியுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கப்பட்டது பெருமைக்குரியது. சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் ராணுவத் தளவாட உற்பத்தி மைய பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்தியாவின் யுபிஐ-யை பிறநாடுகளும் பயன்படுத்துகின்றன. நிதிபற்றாக்குறை குறைந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றது.

வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காலனி ஆதிக்க குற்ற நடைமுறைச் சட்டங்கள் ஒழிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் நாடு மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியுள்ளது. 4 லட்சம் கி.மீ அதிகமாக புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடுமுழுவதும் அதிவேகமாகச் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறன.

தேசிய நெடுஞ்சாலைகளில் தூரம் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. 4 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு காங்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குக் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.4 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டு உள்ளது. உஜ்வாலா திட்டத்தின் மூலம் எண்ணற்ற குடும்பங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகிறன.

எந்த பயனாளியும் விடுபடாமல் அரசின் பயன்கள் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் இலக்கு. 10 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை இலக்கத்தில் இருந்த விலைவாசி உயர்வு தற்போது ஒற்றை இலக்கத்தில் உள்ளது. ரூ.2.5 லட்சத்தில் இருந்த தனிநபர் வருமான வரி விலக்கு தற்போது ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. பிரதமரின் மக்கள் மருந்தகம் மூலம் கேன்சர் நோய்களுக்குக் கூட குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது.

10 கோடிக்கும் அதிகமான பெண்கள் சுயமாகத் தொழில் செய்து வருகின்றனர். உதான் திட்டத்தின் மூலம் ஏழை, நடுத்தர வர்க்கத்தினருக்குக் குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகள் கிடைக்கின்றது. 2 கோடிக்கும் அதிகமான பெண்களை லட்சாதிபதிகளாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீர் பெருமளவு மாற்றமடைந்துள்ளது. முதன்முறையாகப் போர் விமானிகளாகப் பெண்கள் உள்ளனர். பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் மூலம் ரூ.2.80 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. கடந்த 6 மாதமாகப் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதம் அதிகமாக உள்ளது. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறியுள்ளோம். மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் நாட்டில் பெருமளவு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு மையமாக இந்தியா மாரி வருகிறது.

நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் ஏழ்மையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 3 கோடியில் இருந்து 8 கோடியாக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வேளாண் ஏற்றுமதி 4 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. நெல், கோதுமையின் குறைந்தபட்ச ஆதார விலை 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அதிகரிக்கப்பட்டு உள்ளது. மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டைகளுக்கான பலன் கிடைத்துள்ளது. 140 கோடி மக்கலின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம். ஜி20 மாநாடு இந்தியாவின் கௌரவத்தை உயர்த்தியுள்ளது” எனத் தெரிவித்த அவர், ஜி20யில் ஆப்ரிக்க யூனினை சேர்க்க இந்தியா ஆதரவு அளித்ததையும் பாராட்டினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top