புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உட்பட, 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுதும் ‘ஜாக்டோ -ஜியோ’ அமைப்பினர் மறியல் போராட்டம் நடத்தினர். சென்னையில் ஜனநாயக முறையில் போராடிய
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள, ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு சார்பில் கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது.
அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
சரண்டர் விடுப்பு சலுகையை மீண்டும் வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் நடந்த போராட்டத்தின் போது, ஜாக்டோ ஜியோ க்கு ஆதரவாக திமுக குரல் கொடுத்தது. மற்றும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று தருவதாக வாக்குறுதி அளித்தோம். தனது தேர்தல் அறிக்கையிலும் திமுக இதை கூறியிருந்தது.
திமுக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த ஜாக்டோ ஜியோ வினர் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகக் கருதுகின்றனர்
இதன் தொடர்ச்சியாக திமுக அரசுக்கு எதிராகவும் பல போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்
தி.மு.க., அரசை வலியுறுத்தி நேற்று (ஜனவரி 30) மாநிலம் முழுதும் ஜாக்டோ ஜியோ சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் டி.பி.ஐ., வளாகம் முன் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தி.மு.க., அரசை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
அப்போது பலர் கைதாக வராமல் சாலையில் அமர்ந்து தர்ணா செய்தனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி பேருந்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
ஜனநாயக ரீதியில் போராடிய அரசு ஊழியர்களை திமுக அரசு கைது செய்து அவர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைப்பது அதற்கு எதிராக முடியும் என்கின்றனர் திமுகவை நம்பி வாக்களித்தப் பிரமுகர்கள்.