சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியபோது அதிமுக ஆட்சியில் 2015 – 2017ல் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கைமாறியதாக எழுந்த புகார் தொடர்பாக கட்டுமான நிறுவனங்களுடன் தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். முதல் தகவல் அறிக்கையில் சில எம்.பி., எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், தாசில்தார், வி.ஏ.ஓ., மற்றும் அதிகாரிகளின் பெயர் பட்டியல் இடம் பெற்றுள்ளது.
சென்னை, பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் பின்னி மில் இயங்கி வந்தது. பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்த மில் மூடப்பட்டது. இதையடுத்து இங்குள்ள இடத்தின் ஒரு பகுதியை தனியார் நிறுவனங்கள் சார்பில் வாங்கி அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது.
முன்னதாக சுமார் 14.16 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தையொட்டி குறுகலான சாலை இருந்ததால் குடியிருப்பு கட்ட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சிஎம்டிஏ) அனுமதி பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன.
இதனை தொடர்ந்து கவுன்சிலர் முதல் எம்.எல்.ஏ., எம்.பி., என பல்வேறு அரசியல் பிரமுகர்களையும் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட தனியார் கட்டுமான நிறுவனங்கள் உதவி கேட்டுள்ளன.
இதற்கு கைமாறாக பல்வேறு மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு லஞ்சமாக மொத்தம் 50 கோடியே 86,125 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-2017 காலகட்டத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு இந்த லஞ்ச பணம் கைமாறியுள்ளது.
இந்த நிலையில், லஞ்ச விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபி அபய்குமார் சிங் தலைமையிலான போலீஸார் விசாரணையில் இறங்கினர்.
ஏற்கெனவே வருமான வரி துறையிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், பலருக்கும் ரூ.50 கோடி லஞ்ச பணம் கைமாறியதற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, புகாருக்கு உள்ளான கட்டுமான நிறுவனங்களான லேண்ட்மார்க் ஹவுஸிங் புராஜெக்ட்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் உதயகுமார், கேஎல்பி புராஜெக்ட்ஸ் நிறுவன இயக்குநர்கள் சுனில்கெத்பாலியா, மனீஷ் பார்மர் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் கடந்த ஜனவரி 31-ம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிஎம்டிஏ அனுமதி பெறவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் எம்.பி., எம்எல்ஏ, கவுன்சிலர், தாசில்தார், விஏஓ என யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் தரப்பட்டது என்ற பட்டியல், முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இந்த விவரங்களை சம்பந்தப்பட்ட தனியார் கட்டுமான நிறுவனத்தினர் அளித்ததாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, பின்னி மில் பகுதியில் கட்டுமான பணிகளை மேற்கொண்ட 2 கட்டுமான நிறுவனங்களுடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புபிரிவு போலீஸார் நேற்று (பிப்ரவரி 1) தீவிர சோதனை மேற்கொண்டனர். தியாகராய நகர் உள்பட சென்னையில் 5 இடங்களில் இந்த சோதனை நடந்தது. இதில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
48 பேருக்கு லஞ்சம்: சிக்கிய அரசியல் பிரமுகர்கள்:
பின்னி மில் வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு 48 பேருக்கு ரூ.50 கோடியே 86 ஆயிரத்து 125 ரொக்கம் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதில் அப்போது எம்.பி.யாக இருந்த அதிமுகவை சேர்ந்த பாலகங்காவுக்கு ரூ.23 லட்சம், திமுகவை சேர்ந்த ஜவகருக்கு ரூ.33 லட்சம், எம்.எல்.ஏ.வாக இருந்த நீலகண்டனுக்கு ரூ.40 லட்சம், பெயர் குறிப்பிடாத எம்.பி.க்கு ரூ.1.67 கோடி, திமுகவைச் சேர்ந்த பி.கே.எஸ். என்பவருக்கு ரூ.10 லட்சம், அப்போது எம்.பி.யாக இருந்த வெங்கடேசனுக்கு ரூ.20 லட்சம், அந்தக் காலக்கட்டத்தில் கவுன்சிலராக இருந்த சரோஜாவுக்கு 2 லட்சம் என ரூ.2 கோடியே 95 லட்சம் கைமாறி உள்ளது.
மேலும் பெயர் குறிப்பிடப்படாத வட்டாட்சியருக்கு ரூ.2.25 லட்சம், கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியனுக்கு ரூ.15 ஆயிரம், திருமாவளவனுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் 48 பேருக்கு ரூ.50 கோடியே 86 ஆயிரத்து 125 ரொக்கம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்சம் வாங்குவதிலும், ஊழல் செய்வதிலும் அதிமுக, திமுகவும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதும், இரண்டு பேருமே பங்காளிகள் என்று தலைவர் அண்ணாமலை குறிப்பிடுவது சரியாக உள்ளது என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.