ரூ.47.66 லட்சம் கோடி இடைக்கால நிதி நிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட்டை முக்கிய தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி பட்ஜெட் குறித்து கூறியதாவது:
மத்திய பட்ஜெட் சிறப்பானது; அனைத்து தரப்பினரையும் மேம்படுத்தும் வகையில் உள்ளது. இளையோருக்கும், பெண்களுக்கும் நலன் பயக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. எதிர்கால இந்தியா என்ற தாரக மந்திரத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதுவரை 4 கோடி வீடுகள் ஏழைகளுக்காக கட்டித்தரப்பட்டுள்ளன. இன்னும் 2 கோடி வீடுகள் கட்டப்பட உள்ளன. பல்வேறு திட்டங்கள் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது.
புதிய தொழில் துவங்குவதற்கான பொன்னான வாய்ப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. உள்கட்டமைப்புக்கு ஒதுக்கிய தொகை வேகமான வளர்ச்சி, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு காப்பீடுகள் கொடுக்கப்பட்டது மிகப்பெரிய பாதுகாப்பை வழங்கியுள்ளது. சோலார் தகடுகள் அமைப்பதன் மூலம் ஒரு கோடி வீடுகள் இலவச மின்சார சேவையை பெற முடியும். ஏழைகளையும், விவசாயிகளையும் கை தூக்கிவிடும் பட்ஜெட் இது. வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்டின் பலன்கள் மக்களுக்கு நேரடியாக கிடைக்கும் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா:
2047ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற பிரதமர் மோடியின் இலக்கை அடையும் விதமாக பட்ஜெட் அமைந்துள்ளது. அமிர்த காலத்தை நோக்கிய நாட்டின் பயணத்தில் ஒவ்வொரு துறையிலும் கடந்த பத்தாண்டுகளாக அரசு மேற்கொண்ட சாதனை நடவடிக்கைகள் விளக்கப்பட்டுள்ளன.
நாட்டை திறம்பட வழிநடத்திச் செல்லும் பிரதமர் மோடி மற்றும் அறிவுபூர்வமான பட்ஜெட் உரையை நிகழ்த்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்:
வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பிரதமரின் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியா அடைந்துள்ள பொருளாதார வளர்ச்சியை இந்த பட்ஜெட் குறிப்பிடுகிறது.
உள்கட்டமைப்பு, கட்டுமானத்துறை வீட்டு வசதி, மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டு மூலதன செலவுகளுக்காக ரூ.11.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 11.1 சதவீதம் அதிகமாகும். இதன் மூலம் 2027ஆம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என குறிப்பிட்டார்.
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா:
வறுமை ஒழிப்பு என்ற வெற்று முழக்கங்களுக்குப் பதில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மோடி அரசு மீட்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் ராமராஜ்ஜியத்தை நோக்கிய பயணத்தின் வெளிப்பாடாக பட்ஜெட் உள்ளது என்றார்.
உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்:
வளர்ச்சியடைந்த பாரத இலக்கை அடைவதற்காக தொலை நோக்குப்பார்வை கொண்டதாக இந்த பட்ஜெட் உள்ளது. இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியடைவதற்கு வழிவகுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுகளும் நிதியமைச்சர் நிர்மலா சீதாரானுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்.