மாலத்தீவுக்கு வழங்கப்படும் உதவியை குறைத்த இந்தியா!

இந்தியா மாலத்தீவு உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டிற்கு வழங்கப்படும் நிதியையும் மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டில் அதிரடியாக குறைத்துள்ளது.

மாலத்தீவில் கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற தேர்தலில் சீன ஆதரவு பெற்ற முகமது முய்ஸு அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க தொடங்கினார்.
முதலில் மாலத்தீவில் பாதுகாப்பு பணியில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை வெளியேற அவர் கேட்டுக்கொண்டார். அடுத்து அவரது அமைச்சர்கள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசத்தை குறித்து மோசமான கருத்துகளைக் கூறினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிகக் கடுமையாகப் பாதித்தது.

இதற்கிடையே நேற்று (பிப்ரவரி 1) தாக்கலான இடைக்கால பட்ஜெட்டில், 2024-25 நிதியாண்டில் மாலத்தீவுக்கான உதவியை 22 சதவீதம் குறைக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. அதாவது இந்தாண்டு மாலத்தீவுக்கு வளர்ச்சி உதவிக்காக ரூ.600 கோடி மட்டும் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அண்டை நாடுகளுக்கு மத்திய அரசு இதுபோல நிதி அளிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு அரசு வழங்கப்படும் உதவிகளில் மாலத்தீவு மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த 2023-24இல் மாலத்தீவுக்கு ரூ.770.90 கோடி உதவி வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய நிதியாண்டில் அதாவது 2022-23இல் வழங்கப்பட்ட ரூ.183.16 கோடியில் இருந்து இது 300 சதவீதம் அதிகமாகும்.

கடந்த 2023 பட்ஜெட்டில் மாலத்தீவிற்கு அரசு தொடக்கத்தில் ரூ.400 கோடி மட்டுமே ஒதுக்கி இருந்த நிலையில், அதன் பின்னர் ரூ.770.90 கோடியாக உயர்த்தப்பட்டது. கடந்த பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது மாலத்தீவில் இந்தியாவுக்குச் சாதகமான அதிபர் ஆட்சியில் இருந்தார். ஆனால் கடந்தாண்டு இறுதியில் நடந்த தேர்தலில் சீன ஆதரவு அதிபர் தேர்தலில் வென்றது குறிப்பிடத்தக்கது.

மாலத்தீவிற்கு இந்தியா பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. மாலத்தீவுக்குப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு என பல்வேறு துறைகளில் இந்தியா உதவி வருகிறது. ஆனால் புதிதாக தேர்வான அதிபர் சீன ஆதரவை எடுத்து வருகிறார். ஆனால் அங்குள்ள எதிர்க்கட்சிகள் இந்தியாவை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். விரைவில் அங்கு ஆட்சி மாற்றம் நிகழவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top