ஞானவாபி மசூதி வளாக நிலவறையில் இடம்பெற்றிருக்கும் ஹிந்து கடவுள்களுக்கு பூஜை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்த சில மணி நேரத்துக்கு பின்பு புதன்கிழமை இரவு அங்கு பூஜை நடத்தப்பட்டதாக காசி விஸ்வநாதா் கோயில் அறக்கட்டளை தலைவா் தெரிவித்தாா்.
இந்த வழக்கின் மனுதாரரான சைலேந்திர குமாா் பதக், மசூதி நிலவறையில் இடம்பெற்றுள்ள ஹிந்து கடவுள்களுக்கு பூஜை செய்ய ஒரு வாரத்துக்குள் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தரவேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.கே.விஸ்வேஷா புதன்கிழமை உத்தரவிட்டிருந்தாா். மாவட்ட நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறும் இறுதி நாளில் இந்தத் தீா்ப்பை நீதிபதி ஏ.கே. விஸ்வேஷா அளித்தாா்.
இதையடுத்து, புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நிலவறை கதவு திறக்கப்பட்டு அங்கு பூஜைகள் நடத்தப்பட்டதாக காசி விஸ்வநாத் கோயில் அறக்கட்டளை தலைவா் நாகேந்திர பாண்டே தெரிவித்தாா்.
‘நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மாவட்ட நிா்வாகம் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது. நிலவறை கதவு 31 ஆண்டுகளுக்குப் பிறகு பூஜைக்காக திறக்கப்பட்டது’ என்றாா் பாண்டே.
ஸ்ரீ ராம் லல்லா கும்பாபிஷேகத்திற்கான உகந்த நேரத்தை நிர்ணயித்த விஸ்வநாதர் கோவிலின் அர்ச்சகர் பண்டிட் ஓம் பிரகாஷ் மிஸ்ரா மற்றும் ஆச்சார்ய கணேஷ்வர் டிராவிட் ஆகியோர் இந்த பூஜையை தொடங்கினர்.