ஜார்க்கண்டில் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், நில அபகரிப்பு முறைகேடு தொடர்பான சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜனவரி 31ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் ராஞ்சியில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் ராஞ்சி யில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஹேமந்த் சோரனைப் போலவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத் துறையினரின் சம்மன்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.
டெல்லி அரசு கடந்த 2021 — -22 நிதியாண்டில் கொண்டு வந்த மதுபான கொள்கையால் குறிப்பிட்ட மதுபான நிறுவனங்கள் பலனடைந்ததாகவும், அதற்காக பல கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஊழல் குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரைத்தார்.
அதைத் தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரிக்க கடந்த ஆண்டு நவம்பரில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது; அடுத்தடுத்து நான்கு சம்மன்கள் அனுப்பப்பட்டன. ஆனால் கெஜ்ரிவால் சம்மன்களை நிராகரித்து வந்தார்.
இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 02) ஆஜராகக் கோரி 5வது முறையாக நேற்று முன்தினம் (ஜனவரி 31) அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்த நிலையில், பாஜக- ராஜ்யசபா எம்.பி., ஹர்நாத் சிங் யாதவ் நேற்று (பிப்ரவரி 01) கூறுகையில், ‘‘ஹேமந்த் சோரன் மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கை முற்றிலும் சரியானது. அடுத்து சிக்கப் போவது கெஜ்ரிவால் தான்,’’ என்றார்.
ஊழலுக்கு நாங்கள் எதிரான கட்சி என்று அரவிந்த் கெஜ்ரிவால் மக்கள் முன்பாக தன்னை கட்டமைத்து வந்தார். ஆனால் தற்போது மதுபானக் கொள்கையில் பல கோடி ரூபாய் பணம் கைமாறியிருப்பதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது. விரைவில் கெஜ்ரிவால் கைது மூலமாக ஊழல் முகத்தை டெல்லி மக்கள் தெரிந்து கொள்வார்கள் என்பது நியதி.