தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலை புலிகளிடம் ரகசிய உறவு வைத்துக்கொண்டு தமிழகத்தில் ஆயுதப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தயாராகி வந்ததாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணையில் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
‘நாம் தமிழர் கட்சியினர் சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் பதுங்கியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பினருடன் ரகசிய தொடர்பில் இருந்து, நிதி திரட்டும் பணியில் ஈடுபடுகின்றனர்; ஆயுதப் போராட்டத்திற்கும் தயாராகி வருகின்றனர்’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த 2022ல் சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே, சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி, கபிலன் ஆகியோர் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் தயாரித்து வந்தனர். இவர்களுடன் நாம் தமிழர் கட்சியினர் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது.
இது தொடர்பாக இரு தினங்களுக்கு முன், திருச்சியில் நாம் தமிழர் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவராக உயர்ந்து வந்த முக்கிய நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீடு உட்பட ஆறு இடங்களில் என்.ஐ.ஏ., சோதனையில் ஈடுபட்டது.
அப்போது 7 செல்போன்கள், எட்டு சிம் கார்டுகள், நான்கு ‘பென் டிரைவ்’ உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இவற்றை ஆய்வு செய்தபோது சீமானை ஓரங்கட்ட சாட்டை துரைமுருகன் தனி ரூட் போட்டு செயல்பட்டது அம்பலமாகி உள்ளது.
மேலும் இது தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறும்போது;
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், ஆயுதப் போராட்டத்திற்கு தனி அமைப்பு ஒன்றை துவங்க திட்டமிட்டுள்ளனர். அதற்கான பணிகளில் முழுவீச்சில் செயல்பட்டு வந்தனர்.
சீமான் நிதி திரட்டும் பணியை தன்னிடம் ஒப்படைத்து இருப்பதாக, வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் தொடர்பு ஏற்படுத்தி வசூல் வேட்டையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
விடுதலைப் புலிகள் அமைப்பை புனரமைக்க, சென்னையில் தங்கி போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர்களிடமும் தொடர்பு இருந்துள்ளது.
சில செல்போன் தொடர்புகள் மற்றும் சோதனையில் கிடைத்த தகவல்களும் அதை உறுதிப்படுத்துகின்றன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
சீமான் பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக அவர்கள் நடத்தும் கட்சி பொதுக்கூட்டங்களில் தொடர்ந்து பேசி வருகின்றார். இதனை நம்பி ஒரு சில இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.