பொது சிவில் சட்ட மசோதா உத்தரகாண்ட் சட்டசபையில் தாக்கல்!

சுதந்திரத்திற்கு பின் நாட்டிலேயே முதல் முறையாக பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் மாநிலமாக உத்தரகாண்ட் மாறியுள்ளது.

இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்கள் உள்ளன. திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்தந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப சிவில் சட்டங்கள் உள்ளன. தனி நபர் தான் பின்பற்றும் மதத்திற்கு ஏற்றார்போல் சிவில் சட்டங்கள் உள்ளன.

இதனிடையே, உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கடந்த ஆண்டு தெரிவித்தார். மேலும் பொது சிவில் சட்ட மசோதாவை தயாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழுவினர் பல்வேறு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு, 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் ஆலோசனைகளை பெற்று பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வரைவு மசோதாவை தயார் செய்தனர். அந்த வரைவு மசோதா முதலமைச்சரிடம் அறிக்கையாக ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், பொது சிவில் சட்ட வரைவு மசோதா இன்று (பிப்ரவரி 06) உத்தரகாண்ட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் மசோதா வாக்கெடுப்பிற்கு பின் நிறைவேற்றப்பட உள்ளது. மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் அது சட்டமாக அமலுக்கு வரும்.

இதன் மூலம் சுதந்திரத்திற்கு பின் நாட்டிலேயே முதல் முறையாக பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் மாநிலமாக உத்தரகாண்ட் மாறும். கோவாவில் ஏற்கனவே பொது சிவில் சட்டம் உள்ளது. ஆனால், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்தே கோவாவில் பொது சிவில் சட்டம் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top