முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு துறையிலும் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. நாட்டிலேயே மிக உயர்ந்ததாக மதிக்கப்படும் பாரத ரத்னா விருது, பீஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர் மற்றும் பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானிக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார்.
சரண் சிங் 1979ல் பிரதமராக பொறுப்பேற்றார். 170 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்த சரண் சிங், பிறகு, காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெற்றதால் ராஜினாமா செய்ய நேரிட்டது. 1987ல் மறைந்தார்.
அதேபோல், 1991-96 காலகட்டத்தில் பிரதமராக இருந்த நரசிம்ம ராவுக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. காங்கிரசை சேர்ந்த இவர் வெளியுறவு, பாதுகாப்புத்துறை, ரயில்வே துறை போன்ற முக்கிய இலாகாக்களையும் கவனித்து வந்தார். இவர் 2004ல் மறைந்தார்.
கடந்த ஆண்டு மறைந்த இந்தியாவின் சிறந்த வேளாண் விஞ்ஞானியும், பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.