காங்கிரஸ் கட்சியாலேயே தாங்க முடியாத அளவுக்கு ஊழல் செய்தவர் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு என தலைவர் அண்ணாமலை நேற்று (பிப்ரவரி 08) ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசினார்.
பொதுமக்கள் மத்தியில் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
மாபெரும் சமயப் புரட்சிகள் செய்து சனாதன தர்மத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை நிறுவிய, ஸ்ரீராமானுஜர் அவதரித்த திருத்தலமான ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில், தமிழகத்தில் ஊழலற்ற அரசியல் மாற்றம் உருவாக வேண்டும், என்ற நோக்கத்தோடு, பெரும் திரளாகக் கூடி ஆதரவளித்த பொதுமக்கள் அன்பினால் சிறப்புற்றது. நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், சின்ன ஜீயர் அவர்களின் முயற்சியில், ஐதராபாத்தில் 216 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட ஸ்ரீராமானுஜரின் சிலையை, (Statue of Equality), கடந்த 2022 ஆம் ஆண்டு திறந்து வைத்தது, ஸ்ரீபெரும்புதூர் மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமையே.
சைவப் பெரியவர் சேக்கிழார் பிறந்ததும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட குன்றத்தூரில் தான். இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை அமைச்சராக இருந்த இவர், சிவபெருமானின் மீதுள்ள பக்தியால் பெரியபுராணத்தை எழுதினார். ஆதிகேசவ பெருமாள் கோவில், குன்றம் முருகன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் என பல புகழ்பெற்ற கோவில்களால் நிறைய பெற்ற தொகுதி. ஸ்ரீ பெரும்புதூர் அனைத்து பக்கங்களும் தொழிற்சாலைகள் அமைந்திருக்கும் தொழில் நகரம். மத்திய அரசின், Production Linked Incentive programme (PLI) திட்டத்தில் அமையப்பெற்ற ஐபோன் தயாரிக்கும் நிறுவனம் அமைந்திருக்கும் தொகுதி.
ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்கள், தொகுதிக்காக ஒரு முறை கூட பாராளுமன்றத்தில் பேசியது கிடையாது. அவரது சொந்த ஊரான தஞ்சாவூரில் தேர்தலில் நிற்காமல், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடக் காரணம், தஞ்சாவூர் வடசேரி பகுதி விவசாய நிலத்தில் அவரது குடும்பத்துக்குச் சொந்தமான சாராய ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த தஞ்சாவூர் விவசாயிகளை, அதிகாரத் திமிரில் தாக்கியதுதான். கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 அன்று, விவசாயிகள் மீது, டி.ஆர்.பாலுவின் ஆட்கள் தாக்குதல் நடத்தியதால், இன்று வரை அந்த நாள் கருப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. டி.ஆர்.பாலு தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டால், அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காது.
சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டு வர டி.ஆர்.பாலு முயற்சி செய்யக் காரணம், அவரது குடும்பத்துக்குச் சொந்தமான மீனம் பிஷரீஸ் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு லாபம் கிடைக்கத்தான். அரசுப் பதவியைப் பயன்படுத்தி ஆதாயம் தேடுவதில் வல்லவர் டி.ஆர். பாலு. காங்கிரஸ் கட்சியாலேயே தாங்க முடியாத அளவுக்கு ஊழல் செய்தவர் டி.ஆர்.பாலு. 2004 – 2009 வரை மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுவை, மத்திய அமைச்சரவையில் சேர்க்க, அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் எதிர்ப்பு தெரிவித்த அளவிற்கு ஊழல்வாதி. 65 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன் என்று கூறிக் கொள்ளும் டி.ஆர்.பாலு, நேற்று வந்த உதயநிதியை எதிர்த்துப் பேச முடியுமா?
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் செந்தில் பாலாஜி. முதலில் புரட்சி பாரதம் கட்சியிலிருந்து, பின்னர் புதிய தமிழகம் கட்சி, பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து, அங்கிருந்து கட்சி விரோத நடவடிக்கைக்காக நீக்கப்பட்ட பின்னர் திமுகவில் சேர முயற்சித்து முடியாமல் போனதால், தற்போது காங்கிரஸில் இருக்கிறார். திமுகவிரை விட முதலமைச்சர் ஸ்டாலினை அதிகம் புகழ்வது செல்வப்பெருந்தகை தான். வேங்கைவயல் சம்பவத்திற்கோ, நாங்குநேரி சம்பவத்திற்கோ தமிழகம் முழுவதும் நடைபெறும் பட்டியலின மக்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு எதிராகவோ இதுவரை குரல் கொடுத்ததில்லை. இவரது காங்கிரஸ் கட்சியோ, முன்னாள் பாரதப் பிரதமர் ராஜிவ்காந்தியை கொன்றதற்கு தண்டனை பெற்ற ஆட்களை ஆதரிக்கும் திமுகவோடு கூட்டணி அமைத்துள்ளது. தன்மானம் ஒரு துளி கூட இல்லாத கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியில், வீடற்றவர்களுக்கு வீடு, குறைந்த விலையில் மருந்துகள் வழங்கும் மக்கள் மருந்தகங்கள், 50.1 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு, 110 கோடி இந்திய குடிமக்களுக்கு 220 கோடி இலவச கொரோனா தடுப்பூசி, பணப் பரிவர்த்தனையை எளிதாக்கிய டிஜிட்டல் முறை, 28 கோடி இந்திய குடிமக்களுக்கு 5 லட்ச ரூபாய் வரை மருத்துவ காப்பீடு, 11 கோடி விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் கௌரவ நிதி, 11 கோடி இலவச கழிப்பறைகள் என அடிப்படை வசதிகள் அனைத்தையும் மேம்படுத்தியிருக்கிறார். சாலை, ரயில்வே என நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தியிருக்கிறார். அதிகம். நீர் மேலாண்மை, மீனவர் நலன் காக்க தனித்தனி அமைச்சகங்களை அமைத்திருக்கிறார். ரூ.28 லட்சம் கோடி முத்ரா கடனுதவி நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் ஒரு அரசு மருத்துவ கல்லூரி வேண்டும் என்ற இலக்கு நோக்கி நாடு பயணிக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு 57,592 ஆக இருந்த மருத்துவக் கல்வி இடங்கள், இப்போது இரண்டு மடங்காக, 1,08,940 ஆக அதிகரித்துள்ளது.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், கடந்த பத்து ஆண்டுகளாக ஊழலற்ற நல்லாட்சி வழங்கி வரும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை ஆதரிப்போம். தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்துவோம். இவ்வாறு தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.