திமுகவை மக்கள் தூக்கி எறியும் காலம் வந்து விட்டது, என பாஜக தேசியதலைவர் ஜெ.பி.நட்டா பேசினார்.
மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை, 200வது தொகுதியாக நேற்று (பிப்ரவரி 11) சென்னை துறைமுகம் தொகுதியில் நடந்தது. அதில் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்றார். அவருடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வள்ளலார் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா,
தேசிய வளர்ச்சி குறித்து பேசும் போது, தமிழகத்தின் பங்கை குறிப்பிடாமல் இருக்க முடியாது. பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்திற்கு நெருக்கமானதாக தமிழகம் உள்ளது. அவர் எங்கு சென்றாலும், தமிழகத்தின் இலக்கியங்களை சுட்டிக் காட்டுகிறார்.
சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு, ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.சுவாமிநாதன் இந்தியாவுக்கு உணவு பாதுகாப்பை அளித்தார். இன்று உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற்றுள்ளதுடன், வெளிநாடுகளுக்கு வழங்குகிறோம்.
தமிழகம் மிகச் சிறந்த கலாசாரம், பாரம்பரியம், பழமையான மொழி போன்றவற்றை தன்னகத்தே கொண்டது. ஆன்மிகத்திற்கு தமிழகம் அளித்துள்ள பங்கையும் மறக்க முடியாது.
ஆனால், இன்று தமிழகம் மோசமான தலைவரால் ஆளப்படுகிறது. தமிழக மக்கள் கடுமையான உழைப்பாளிகள்; நாட்டுக்கு விசுவாசமாக உள்ளனர்.
தி.மு.க., தலைமைக்கு ஞானம் இல்லை. ஜனநாயகத்துக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வு இல்லை. நான் வரும் போது, தெரு விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன; கடைகள் மூடப்பட்டிருந்தன; போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த காட்சிகள், எமர்ஜென்சி காலமான நெருக்கடி நிலையை நினைவு படுத்துகின்றன.
முதல்வர் ஸ்டாலினுக்கு சொல்கிறேன்; உங்களின் செயல்பாடுகளால் உங்களை தூக்கி எறியும் காலம் வந்து விட்டது. போலீசார் கடைகளை மூட வைக்கின்றனர். இது ஜனநாயகமா; தமிழகத்தின் பாரம்பரியமா?
திமுக தெரு விளக்குகளை அணைக்கிறது. ஆனால் திமுக விளக்கை அணைப்பதற்கான நேரம் வந்து விட்டது. அதற்கான யாத்திரையை அண்ணாமலை நடத்தி வருகிறார். யாத்திரை 200 தொகுதிகளை நிறைவு செய்துள்ளது. வரும் 25ம் தேதி 234 சட்டசபை தொகுதிகளில் யாத்திரையை நிறைவு செய்ய உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டை வளர்ச்சி அடையச் செய்துள்ளார். ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்பதே நம் கொள்கை. பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின் ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை தந்துள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் உலகப் பொருளாதாரத்தில் நம் நாடு ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளது. நம்மை ஆண்ட பிரிட்டனை முந்தி வந்துள்ளோம். பாஜகவுக்கு மீண்டும் வாய்ப்பளித்தால் உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும். தற்போது நம் நாடு ஆட்டோ மொபைல் உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி, மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளது. முன்பெல்லாம் மொபைல் போன்களில் 92 சதவீதம் சீனாவில் தயாரிக்கப்பட்டன; இன்று 97 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இரும்பு உற்பத்தியில் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளோம்.
அனைத்துக்கும் மேலாக 500 ஆண்டுகளுக்கு மேலாக தீராமல் இருந்த ராமஜென்ம பூமி பிரச்னை தீர்க்கப்பட்டு ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, நாட்டில் பிரிக்கப்படாத பகுதியாக காஷ்மீரை மாற்றி உள்ளோம். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு ஆதரவு தர வேண்டும். 400 எம்.பி.,க்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க ஆதரவு தர வேண்டும். தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக திமுக பொய் சொல்கிறது.
* நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தில், தமிழகத்தில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது
* இலவச காஸ் இணைப்பு கொடுக்கும் திட்டத்தில், தமிழகத்தில் 38 லட்சம் பேர் இணைப்பு பெற்றுள்ளனர்
* பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பயன் பெற்ற நான்கு கோடி பேரில், 1.50 கோடி பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்
* விவசாயிகள் உதவித்தொகை பெறும் 12 கோடி பேரில், 38 லட்சம் பேர் தமிழக விவசாயிகள்.
திமுக என்றால் வாரிசு, பண மோசடி, கட்டப் பஞ்சாயத்து. தி.மு.க., அமைச்சர்களில் ஒருவர் சிறையில் உள்ளார்; மற்றொரு அமைச்சருக்கு சொத்து குவிப்பு வழக்கில், நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
தற்போது, இ.ண்.டி. கூட்டணியை துவக்கி உள்ளனர். அந்த கூட்டணியில் பரூக் அப்துல்லா, அவரது மகன்; முலாயம் சிங், அவரது மகன், மருமகள்; லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி, மகன், மருமகள்; உத்தவ் தாக்கரே, அவரது மகன்; ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி; சோனியா, ராகுல், பிரியங்கா என குடும்பங்கள் தான் உள்ளன. தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றவும் சொத்துக்களை பாதுகாக்கவும் இ.ண்.டி. கூட்டணியை துவக்கி உள்ளனர்.
இவ்வாறு தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பேசினார்.