பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு பின், ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்வால் கூடுதல் வருவாய் கிடைப்பதால் அங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், சுற்றுலா பயணிகளுக்கான அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22ல் நடந்தது. இதற்காக 11 நாட்கள் விரதம் இருந்த பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று வழிபட்டார்.
அதே போன்று கடந்த ஜனவரி 19ல் சென்னை வந்த பிரதமர், மறுநாள் காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார். மதியம் ராமேஸ்வரம் சென்ற அவர், கடல் மற்றும் புனித தீர்த்தங்களில் நீராடிய பின் ராமநாத சுவாமியை வழிபட்டார். அன்றைய இரவு ராமேஸ்வரத்தில் தங்கிய பிரதமர் மோடி, அடுத்த நாள் காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்றார்.
அரிச்சல்முனையில் இருந்து தொலைநோக்கி கருவி வாயிலாக, இந்தியா – இலங்கை கடல் பகுதியில், ராமர் அமைக்கப்பட்டிருந்த இடங்களை பார்வையிட்டார்; பின் அரிச்சல்முனை கடற்கரையில் மலர்களை தூவி வழிபாடு செய்ததுடன் சிறிது நேரம் கடற்கரை ஓரத்தில் நாற்காலியில் அமர்ந்து இயற்கை அழகை கண்டு களித்தார்.
இதனால் நாடு முழுதும் உள்ள மக்கள் தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதிக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது அந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
பலரும் அரிச்சல்முனையில் இருந்து கடலில் உள்ள மணல் திட்டுக்களையும், தனுஷ்கோடியில் கடலில் மூழ்கி சேதமடைந்த ரயில் நிலையத்தை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். இதனால் இதைச் சார்ந்து பிழைப்பு நடத்துவோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரிச்சல் முனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முன்பெல்லாம் ராமேஸ்வரம் கோவிலுக்கு வருவோரில், குழுவாக வருவோர் தான் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு வந்து செல்வர். பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு பின், கோவிலுக்கு வரும் பலரும் அரிச்சல்முனைக்கு வந்து கடற்கரையில் அதிக நேரம் செலவிடுகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்களும் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்வது போல, விடுமுறை நாட்களில் காரில் அரிச்சல்முனை வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.