கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு, கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்த இருந்த கார் திடீரென்று வெடித்தது. இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த பயங்கரவாதி ஜமேஷா முபின் இதில் உயிரிழந்தான். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 15) நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
30 செல்போன்கள், 25க்கும் மேற்பட்ட ஆவணங்கள், 6 ஹார்ட் டிஸ்க்குகள், 20க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆய்வில் கிடைக்கும் தகவலை வைத்து அடுத்தகட்ட சோதனையும், விசாரணையும் நடைபெறும் என்று என்.ஐ.ஏ., தகவல் தெரிவித்துள்ளது.