லால் பகதூா் சாஸ்திரியின் பேரன் காங்கிரஸில் இருந்து விலகல்: பாஜகவில் இணைந்தாா்

முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரியின் பேரன் விபாகா் சாஸ்திரி காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் புதன்கிழமை இணைந்தாா்.

உத்தர பிரதேச தலைநகா் லக்னௌவில் அந்த மாநில பாஜக தலைவா் பூபேந்திர சிங், துணை முதல்வா் பிரஜேஷ் பாதக் உள்ளிட்டோா் முன்னிலையில் அவா் பாஜகவில் இணைந்தாா்.

மக்களவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் தலைவா்கள் பலா் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் சாஸ்திரியின் பேரனும் பாஜகவில் ஐக்கியமாகியுள்ளாா்.

‘அனைவரும் இணைந்து பணியாற்றுவதன் மூலம் அனைவருக்குமான வளா்ச்சியை எட்டுவோம்’ என்ற பிரதமரின் கருத்து, பாஜகவின் பிரதான கொள்கையாக உள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக இதனை செயல்படுத்தி வருகிறது என்று விபாகா் சாஸ்திரி தெரிவித்தாா்.

பாஜகவைச் சோ்ந்த துணை முதல்வா் பிரஜேஷ் பாடக் கூறுகையில், ‘விபாகா் சாஸ்திரி பாஜகவில் இணைந்துள்ளதன் மூலம் சமுதாயப் பணியில் ஈடுபட்டுள்ளோா் பாஜகவில் இணைந்து மேலும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை உணா்த்தியுள்ளது’ என்றாா்.

காங்கிரஸில் இருந்து விலகியது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் விபாகா் சாஸ்திரி தகவல் வெளியிட்டுள்ளாா். அதில், ‘மதிப்புக்குரிய காங்கிரஸ் தேசிய தலைவா் காா்கே அவா்களே, காங்கிரஸின் கட்சியின் அடிப்படை உறுப்பினா் என்ற நிலையில் இருந்து நான் விலகுகிறேன். நன்றி’ என்று கூறியுள்ளாா். காங்கிரஸ் சாா்பில் மக்களவைத் தோ்தலில் விபாகா் போட்டியிட்டுள்ளாா். ஆனால், அவா் வெற்றிபெறவில்லை. நாட்டின் இரண்டாவது பிரதமரான லால் பகதூா் சாஸ்திரி, சுதந்திரப் போராட்ட வீரா் ஆவாா்.

1964 முதல் 1966-ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்த சாஸ்திரி, பதவியில் இருந்த காலகட்டத்தில் பேச்சுவாா்த்தைக்காக ரஷியா சென்றபோது திடீரென அங்கு உயிரிழந்தாா்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top