நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், பா.ஜ.க.,வின் இரண்டு நாள் தேசிய பொதுக்குழு கூட்டம் டெல்லியில் இன்று (பிப்ரவரி 17) துவங்கியது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அரங்கில் வைக்கப்பட்டிருந்த மத்திய அரசின் சாதனைகள் குறித்த கண்காட்சியை பார்வையிட்டார்.
நாடாளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. இதற்கான பணிகளை தலைமை தேர்தல் கமிஷன் முன்னெடுத்துள்ளது. தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க., மற்றும் பிறகட்சிகள் தங்கள் பிரசாரங்களை துவக்கி உள்ளன.
இந்த நிலையில், பா.ஜ.க.,வின் தேசிய குழு கூட்டம் டெல்லியில் இன்று துவங்கியது. பாரத் மண்டபத்தில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் ,இரண்டு நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பிரதமர் மோடியை, சால்வை அணிவித்து ஜே.பி.நட்டா வரவேற்று அழைத்து சென்றார்.
இக்கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தேர்தல் யுக்திகள், கருத்துக்கணிப்பு ஆய்வுகள் குறித்தும் ,
இரண்டு நாள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. நாளை (பிப்ரவரி 18) . அரசின் 10 ஆண்டு கால சாதனை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, சட்டப்பிரிவு 370 ரத்து, ஜி- 20 மாநாடு நிகழ்வு போன்றவற்றை வெற்றிகரமாகச் செய்த பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நிறைவு உரை ஆற்ற உள்ளார்.
நாடு முழுவதிலும் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.