பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில், தமிழக அரசியலுக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் ,வெற்றி பெறுவது எப்படி? என விவாதிப்பது வழக்கம். ஆனால், டெல்லி பாரத மண்டபத்தில் கடந்த பிப்ரவரி 17, 18-ல் நடைபெற்ற 2 நாள் பாஜகவின் தேசிய பொதுக் கூட்டத்தில் ,எத்தனை தொகுதிகளுடன் வெற்றி என விவாதிக்கப்பட்டது. இதில், மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் பாஜக பெறவிருப்பது 370, 400 எனப் பேசப்பட்டது. ‘அப்கி பார் சார்சவு பார் (அடுத்தமுறை 400க்கும் அதிகம்)’ எனும் கோஷம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இவற்றின் பின்னணியில் எதிர்கட்சிகளின் பொருந்தாக் கூட்டணியும், அதிலும் காங்கிரஸ் கட்சி வலுவாக இல்லை எனவும் காரணம் காட்டப்பட்டது. மேற்கண்டவற்றை சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பேசி இருந்தனர்.
இதற்கிடையே, எந்த மாநிலத்துக்கும் இல்லாத முக்கியத்துவம் தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளது. இதில், தமிழக அரசியல், தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களும் இடம் பெற்றிருந்தனர்.
பாஜக கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தன் உரையில், சமீபத்திய தனது தமிழ்நாட்டின் தனுஷ்கோடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட தென்மாநிலக் கோயில்கள் விஜயத்தை, ராமர் கோயிலுடன் இணைத்துப் பேசினார். அதில் 800 வருடத்திற்கு முன் கம்பராமாயணம் எழுதிய கம்பர் அமர்ந்த அதே இடத்தில் தானும் அமர்ந்து ,அதை பாடக் கேட்டதாகவும் தெரிவித்தார். காசி தமிழ்ச் சங்கமங்கள், பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் சுப்பிரமணிய பாரதிக்கான இருக்கை அமைத்ததையும் பிரதமர் குறிப்பிட்டார்.
கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்த்திய உரையின் போதும், பிரதமர் இடையில் பேசினார். அப்போது பிரதமர், “நீங்கள் தமிழ், தெலுங்கு மொழிகளையும் அறிவீர்கள். ஏன் இங்கு தமிழில் உரையாற்றக் கூடாது?” எனக் கருத்துத் தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில நிமிடங்கள் தமிழில் பேசினார்.
இதையே பின்பற்றி மத்திய தகவல் ஒலிபரப்பு, பால்வளம் துறைகளின் இணை அமைச்சரான எல்.முருகனும் தமிழில் உரை நிகழ்த்தினார். தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியுடன் இதர மொழிகளில் தமிழில் மட்டுமே உரைகள் நிகழ்த்தப்பட்டன.
பாஜக கவுன்சிலின் இடையே பிரதமர் மோடி, உத்திர பிரதேச முதல்வர் யோகியை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தது. இவருடன் பேசவும், உடன் நின்று படம் எடுத்துக் கொள்ளவும் கவுன்சிலின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆர்வம் காட்டினர். இதற்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அவருக்கு இந்தி மொழி பேசத் தெரிந்ததும், இளம் தலைவராக இருப்பதும் காரணமானது.
இவர்களுக்காக நேரம் ஒதுக்கிய தலைவர் அண்ணாமலைக்கு, பொதுக் குழு கூட்டத்தில், கூட்டம் நிரம்பியதால் அமர இருக்கை கிடைக்கவில்லை. இதற்காகக் கவலைப்படாத தலைவர் அண்ணாமலை முதல் நபராக மேடையின் முன் சென்று தரையில் அமர்ந்தார். பலராலும் கவரப்பட்ட இந்த நடவடிக்கையால் ,மேலும் பலர் அண்ணாமலையைப் பின்பற்றித் தரையில் அமர்ந்தனர்.
இதேபோல், தனியாக நடைபெற்ற மாநில நிர்வாகிகள் கூட்டங்களிலும், தமிழ்நாடு பாஜக தலைவர் முக்கியத்துவம் பெற்றிருந்தார். இவ்வாறாக அனைத்தின் பின்னணியிலும், தமிழ்நாட்டின் அரசியலில் பாஜக காட்டும் ஆர்வம் அதிகளவு இருந்தது குறிப்பிடத்தக்கது.