நமது ‘என் மண், என் மக்கள்’ பயணம், கடுமையான பயணமாகவே இருந்திருக்கிறது. திமுக அரசின் பல தடைகளைக் கடந்து, இன்று, மாபெரும் மக்கள் இயக்கமாக உருவாகி இருக்கிறது என, நேற்று (பிப்ரவரி 22) கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற யாத்திரையில், தலைவர் அண்ணாலை பேசினார்.
மேலும் அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:
‘என் மண், என் மக்கள்’ பயணம், கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில், மாண்புமிகு மத்திய இணையமைச்சர்கள், தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள், சகோதர சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளெனச் சூழ, மாபெரும் பொதுக்கூட்டமாக சிறப்புற நடைபெற்றது.
அரசியலை ஒரு விரிவான கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்கள் கோவை மக்கள். உலகத்தில் எங்கே ஒரு பிரச்சனை நடந்தாலும், அது கோயம்புத்தூரையும் பாதிக்கும் அளவிற்கு, உலகளாவிய தொடர்புடைய நகரம். கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று வெடிகுண்டு வெடித்து பலர் கொல்லப்பட்டதையும், காயமடைந்ததையும் பொதுமக்கள் என்றும் மறக்கமாட்டார்கள். அந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தமிழகத்தையும் தாண்டிச் செயல்படுபவர்கள். மத்திய அரசின் சிறு, குறு தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் மூலம் தமிழகத்தில் அதிகமாக பயன்பெற்ற மாவட்டம் கோவை. கோவையில் உற்பத்தியாகும் பொருள்கள், உலகம் முழுவதும் செல்கின்றன. உலகம் முழுவதுமான தாக்கம் இருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளாக கோயம்புத்தூர் மக்கள் நன்றாக இருக்கிறார்கள், எந்தப் பிரச்சனையும் நமக்கு இல்லை என்றால் அதற்கு காரணமாக இருக்கக்கூடிய ஒரே ஒரு மனிதர் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மட்டுமே.
கோவை மாவட்டத்தில் மட்டுமே 250 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. அதனால் தான் கல்லூரிகளின் நகரம் என்று சொல்வார்கள். படித்த, பண்பான, நாகரீகமான மக்கள். அரசியல் தொலைநோக்கு பார்வையோடு வாக்களிக்கக் கூடியவர்கள். அதனால் தான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் முதல் தாமரை கோயம்புத்தூரில் மலரும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். என் மண் என் மக்கள் பயணத்தின் நிறைவு விழா, கோயம்புத்தூர் பாராளுமன்றத்திற்கு உட்பட்ட பல்லடம் சட்டப்பேரவை தொகுதியில் வரும் 27 ஆம் தேதி நடக்க இருக்கிறது. 15 லட்சம் பேருக்கு மேல் கூடவிருக்கிறார்கள். நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள். தமிழகத்தில் எந்தக் கட்சியும், இது போன்ற பொதுக்கூட்டம் நட த்தியதில்லை எனும் அளவுக்கு , ஆதரவோடு வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
தமிழகத்தில், நமது பிரதமர் அவர்கள் 2021 ஆம் ஆண்டிற்குப் பிறகு, பேசப் போகின்ற முதல் அரசியல் மேடை. தமிழக அரசியல் மாற ஆரம்பித்து விட்டது. 1967ல் ஒரு மாற்றம், தேசிய கட்சி காங்கிரஸ் அகற்றப்பட்டு ஒரு திராவிடக் கட்சி திமுக ஆட்சிக்கு வந்தது. இன்று 2024ல், மீண்டும் ஒரு மாற்றத்தின் உணர்வு நமக்குத் தெரிகிறது. வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான முதல் படி, வரும் 2024 பாராளுமன்றத் தேர்தல். வரும் 27 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நமது பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம், இந்த மாற்றத்திற்கான அற்புதமான கூட்டம். அனைவரும் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு, நமது பிரதமர் அவர்களுக்கு அன்பும், ஆசிகளும் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்துக் கொள்கிறேன்.
பாஜக கட்சியில், தகுதியும் திறமையும் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம். பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகலாம். எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த நமது மத்திய இணையமைச்சர் அண்ணன் எல்.முருகன் அவர்களைப் போல, அனைத்து முதல் தலைமுறை இளைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து, அனைவரையும் மதிக்கும் கட்சி என்பதை தொடர்ந்து பாரதிய ஜனதா உணர்த்திக் கொண்டிருக்கிறது.
நமது என் மண் என் மக்கள் பயணம், கடுமையான பயணமாகவே இருந்திருக்கிறது. திமுக அரசின் பல தடைகளைக் கடந்து, இன்று, மாபெரும் மக்கள் இயக்கமாக உருவாகி இருக்கிறது. ஒரு புதிய அரசியலை முன்னெடுக்கும் நோக்கத்துடன், தொடர்ந்து பயணிக்கிறோம். இந்த அரசியலில், ஊழல் இருக்காது, லஞ்சம் இருக்காது, குடும்ப அரசியல் இருக்காது. அப்படிப்பட்ட நேர்மையான அரசியல் தமிழகத்தில் உருவாக, மத்தியில் நமது பிரதமர் மோடி அவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். 2024 ஆம் ஆண்டு நமது காலம். இது சரியான நேரம். இந்த நேரம் நம்முடைய நேரம். இந்த வாய்ப்பை நாம் தவற விடக்கூடாது. இந்த வாய்ப்பைத் தவற விடுவது, நாம் செய்த சரித்திரப் பிழை ஆகிவிடும்.
அண்ணாமலை பூச்சாண்டி, மாயாண்டி போல் இருக்கிறான் என்று பங்காளிக் கட்சித் தலைவர்கள் கூறுகிறார்கள். லேகியம் விற்கிறேன் என்று விமர்சிக்கிறார்கள். மாயாண்டி, பூச்சாண்டி எல்லாம் கிராமங்களின் காவல் தெய்வங்கள். அதனால் அவர்கள் கூறுவதை நான் பெருமையாக எடுத்துக் கொள்கிறேன். இன்றைக்கு மக்களின் காவல் தெய்வமாக பாரத பிரதமர் நரேந்திரமோடி இருக்கிறார். வரும் 27 ஆம் தேதி, இப்படிப் பேசுபவர்களுக்கு எல்லாம், பெரிய பாட்டிலில் லேகியம் விற்கப்படும். தமிழகத்தைப் பிடித்திருக்கும் வியாதிக்கெல்லாம் அதுதான் மருந்து.
மத்திய அரசின் திட்டங்களைப் பெயர் மாற்றி அறிவிப்பதற்காக மட்டுமே, திமுக அரசு பட்ஜெட் போட்டிருக்கிறது. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் – கலைஞரின் கனவு இல்லம், பிரதமரின் கிராம சாலை திட்டம் – முதலமைச்சரின் கிராம சாலை திட்டம், ஜல் ஜீவன் திட்டம் – குழாய் மூலம் குடிநீர் திட்டம், சகி நிவாஸ் விடுதிகள் – தோழி விடுதிகள், விஷ்வகர்மா திட்டம் – கைவினைஞர் மேம்பாட்டு திட்டம், அம்ருத் திட்டம் – கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் என அனைத்துத் திட்டங்களுக்கும் திமுக ஸ்டிக்கர் மட்டுமே ஒட்டியிருக்கிறது.
தமிழகத்தில் சாராய விற்பனை மூலமாக வரும் வருமானம் மட்டும் ரூ.50,000 கோடி. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் சாராயம் விற்பனை ரூ.50,000 கோடி இல்லை. இதுதான் திராவிட மாடல் ஆமை அரசு. ஆமை புகுந்த வீடும், திமுக ஆளுகின்ற பகுதியும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, மக்கள் ஏமாந்து ஒரு முறை திமுகவுக்கு வாக்களித்தால், அதன் பிறகு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் திமுகவை உள்ளே விட மாட்டார்கள். இந்த முறை, திமுக தொண்டனே, திமுகவுக்கு வாக்களிக்கத் தயாராக இல்லை.
தமிழக அரசு பட்ஜெட்டில், கோவை மாவட்டத்திற்கான, நொய்யல் நதியை சுத்தம் செய்ய, சென்னையைப் போல கோவையிலும் திட்டங்கள் செயல்படுத்த, பூஞ்சோலை திட்டம், விளாங்குறிச்சியில் புதிய ஐடி பார்க், கலைஞர் நூலகம் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்துவோம் என்று மட்டும் அறிவித்துவிட்டு, அதற்கான நிதியை ஒதுக்கவில்லை. இத்தனை பெரிய சிறப்பான நகரத்துக்கு, சர்வதேச தொடர்பு இல்லை என்பது வெட்கக்கேடு. கோயம்புத்தூரில் வளர்ச்சியே வரக்கூடாது என்பதாகவே செயல்படுகிறது திமுக அரசு. கோவையின் பாராளுமன்ற உறுப்பினர் வளர்ச்சிக்கு எதிராக இருக்கிறார். வளர்ச்சிக்கும், திராவிட முன்னேற்ற கழகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தினமும் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதி செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை அதற்கு மற்றுமொரு சாட்சி.
நேற்றைய தினம், நமது பிரதமர் கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தியிருக்கிறார். 10 ஆண்டுகளில் 62% விலை உயர்த்தியிருக்கிறோம். ஆனால் திமுக, தனது தேர்தல் வாக்குறுதிகளில் கூறிய படி, கரும்பு, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வை இன்னும் நிறைவேற்றவில்லை. ஆனால், மத்திய அரசு செய்ததற்கு, தங்கள் பெயர் வைத்துக் கொள்ள மட்டும் முன்வருவார்கள்.
இந்தியா முழுவதும், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில், பெட்ரோல், டீசல் விலையை குறைத்திருக்கிறார்கள். ஆனால், மத்திய அரசு விலையைக் குறைத்த பிறகும், திமுக அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல், மூன்று ஆண்டுகளாக வஞ்சித்து வருகிறது. தமிழகத்தைக் கடன்கார மாநிலமாக மாற்றியது மட்டும்தான் மிச்சம். மத்திய அரசு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வந்த மண்வள அடையாள அட்டையை, இப்போது கொண்டு வருவதாக ஏமாற்று வேலை செய்திருக்கிறார் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் மூன்று லட்சம் மெட்ரிக் டன் குறைந்திருக்கிறது. ஆனால், உணவு தானிய உற்பத்தி அதிகரித்திருப்பதாக, சட்டமன்றத்திலேயே பொய் சொல்கிறார் அமைச்சர்.
நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு நாட்டின் வளர்ச்சி ஒன்றே குறிக்கோள். திமுகவுக்கோ, கோபாலபுரத்தின் வளர்ச்சி மட்டுமே முக்கியம். தமிழக மக்கள் இப்போது இந்தியா முழுவதும், பட்டி தொட்டியெல்லாம் வளர்ச்சியை கொண்டு வந்த பாரதிய ஜனதா கட்சியின் பக்கம். நமது பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் பக்கம். வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி, நம்முடைய பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வு ,ஒரு சரித்திர நிகழ்வாக இருக்கும். பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்ப நிகழ்வாக எண்ணி இதில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.