கர்நாடகாவில் ஹிந்து கோவில்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு, பக்தர்களும், ஹிந்து அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த மசோதாவை சட்ட மேலவையில் பாரதிய ஜனதா கட்சியும், ம.ஜ.த., இணைந்து தோல்வியடைய செய்தன.
கர்நாடகா சட்டசபையில் , இரண்டு நாட்களுக்கு முன் ‘கர்நாடக ஹிந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024’ நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள கோவில்களிடம் இருந்து 10 சதவீத தொகையும், 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் உள்ள கோவில்களில் இருந்து 5 சதவீத தொகையும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, இந்த மசோதா மீது நேற்று சட்ட மேலவையில் வாக்கெடுப்பு நடந்தது. இந்த அவையில் அம்மாநில ஆளும் காங்கிரசுக்கு 30 எம்எல்சி.,க்களும், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவிற்கு 38 எம்.எல்.சி.,க்களும், மஜத.,வுக்கு ஒரு எம்எல்சி.,யும், சுயேச்சை ஒருவரும் உள்ளனர். ஒரு இடம் காலியாக உள்ளது. எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் நிறைந்த இந்த அவையில் ,கர்நாடக ஹிந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024 தோல்வியடைந்தது. இது முதல்வர் சித்தராமையாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கர்நாடக காங்கிரஸ் அரசின் இந்த முடிவுக்கு பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.