சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், ஆட்டோ ஓட்டுநர்களுடன் கலந்துரையாட வந்த காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம், அயோத்தி ராமர் கோவில் செல்வதற்கு உதவி கேட்ட மூதாட்டியை, விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்புவனத்தில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று (பிப்ரவரி 23) மாலை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்ச்சியில், ஆட்டோ ஓட்டுநர்களுடன், கார்த்தி சிதம்பரம் பேசிக்கொண்டிருந்தபோது பொது மக்கள் மனு அளித்தனர்.
அப்போது செல்லப்பனேந்தலைச் சேர்ந்த மூதாட்டி வள்ளி, அயோத்தி ராமர் கோவில் செல்ல உதவ வேண்டும் என்றார். கடுப்பான கார்த்தி சிதம்பரம் உள்ளூரில் இருக்கும் சாமியை கும்பிடு போ.. போ.. என விரட்டி அடித்தார். மூதாட்டியும், அங்கிருந்த பொதுமக்களும் அதிர்ச்சியுற்றனர்.
மூதாட்டி வள்ளி கூறுகையில், ‘‘உள்ளூர் கோவிலில் தரிசனம் செய்ய எனக்கு தெரியாதா. அயோத்திக்கு ரயில்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது. தொகுதி எம்.பி., என்பதால் உதவி கேட்டேன். அதற்கு என்னை விரட்டியடித்து விட்டார்,’’ என்றார்.
திமுக மட்டுமின்றி, அக்கட்சியில் கூட்டணியில் உள்ள அனைவருமே இந்துக் கடவுள்களை இழிவுப்படுத்துபவர்கள்தான். காங்கிரஸ் மட்டும் விதிவிலக்கா என பொதுமக்கள் புலம்பியவாறு சென்றனர்.