பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ,ஆழ்கடலில் நீருக்கடியில் சென்று நீரில் மூழ்கிய துவாரகா நகரம் அமைந்துள்ள இடத்தில் பிரார்த்தனை செய்தார். இது பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம், துவாரகாவில் நேற்று (பிப்ரவரி 25) நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஒகா பெருநிலப் பகுதியையும், பேட் துவாரகா தீவையும் இணைக்கும் வகையில், 980 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நாட்டின் மிக நீண்ட பாலத்தை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து, ஆழ்கடலில் நீருக்கடியில் சென்று நீரில் மூழ்கிய துவாரகா நகரம் அமைந்துள்ள இடத்தில் பிரார்த்தனை செய்தார். இந்த அனுபவம் இந்தியாவின் ஆன்மிக மற்றும் வரலாற்று வேர்களுடன் ஒரு அரிய மற்றும் ஆழமான தொடர்பை வழங்கியதாக தெரிவித்தார்.
வளமான கலாச்சார மற்றும் ஆன்மீகப் பாரம்பரியமிக்க நீருக்கடியில் உள்ள துவாரகாவுக்கு, மயில் இறகுகளையும் பிரதமர் நரேந்திர மோடி காணிக்கையாக வழங்கினார்.
இது தொடர்பாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ். வலைத்தளப்பதிவில் கூறியதாவது, “நீரில் மூழ்கியுள்ள துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீக அனுபவம். ஆன்மீக மகத்துவம் மற்றும் காலத்தால் அழியாத பக்தியின் ஒரு பண்டைய சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்” என்று கூறினார்.
73 வயதிலும் கடலுக்கு அடியில் செல்வது சாதாரண விஷயம் கிடையாது. ஆனாலும் ஆன்மிகத்தின் மீது முழு நம்பிக்கை கொண்ட பிரதமர் நரேந்திர மோடி கடலுக்கு அடியில் சென்று பிரார்த்தனை செய்தார். இவரது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோடிக்கணக்கான மக்கள் தங்களது மகிழ்ச்சியையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.