அமரத்துவம் எய்தினார் ஒரே நாடு ஆசிரியர் குழு உறுப்பினர் இரா. ஸ்ரீதரன்.!

ஒரே நாடு இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன் நேற்று 28.02.2024, அதிகாலை 2 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார்.

சென்னை, வடபழனியில் வசித்து வந்தவர் ஸ்ரீதரன் (72 வயது). இவர் ஒரே நாடு இதழின் ஆசிரியர் குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார். தேசிய உடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சட்டத்துறை அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் எழுத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக இன்றைய நாகலாந்து ஆளுநர் திரு. இல. கணேசன் அவர்கள் ஒரே நாடு இதழின் ஆசிரியராக இருந்தபோது தன்னார்வத்துடன் தன்னை ஒரே நாடு குழுமத்தில் இணைந்துக் கொண்டார். கட்டுரைகள், மொழியாக்கக் கட்டுரைகள், நேர்காணல்கள் என கடந்த 15 ஆண்டுகளாக ஒரே நாடு இதழுக்கு இவர் ஆற்றி வந்த சேவை அளப்பரியது.

செங்கல்பட்டு ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மாணவர், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் எம்.எஸ்.சி இயற்பியலில் முதல் மாணவர், அதைத் தொடர்ந்து சட்டப்படிப்பு என படிப்பில் கரை கண்டவர். சிறுவயது முதலே ஆர்எஸ்எஸ் ஷாகாகளில் பங்கேற்று, நாட்டிற்கும் சமூகத்திற்கும் தொண்டாற்றி வந்தவர். ஆழ்ந்த படிப்பாளி, படைப்பாளி, அரசியல், சமூகம், தர்மம், ஆன்மீகம், வரலாறு, பொருளாதாரம் என அவர் எழுதாத விஷயங்கள் இல்லை. சிறந்த பேச்சாளர். 2014 பொதுத் தேர்தலின் போது நரேந்திர மோடி அவர்கள் பற்றி தானே ஒரு புத்தகம் எழுதி அச்சிட்டு பலருக்கும் இலவசமாக விநியோகித்தவர்.

கடந்த 2022 மே 28ம் தேதி அன்று சென்னை ராமாவரம் தோட்டத்தில் நடைபெற்ற ஒரே நாடு இதழின் முப்பெரும் விழாவில் இவரது சேவையை பாராட்டி மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் ஒரே நாடு சார்பிலான ‘பாராட்டு பத்திரத்தை’ இவருக்கு வழங்கி கௌரவித்தார்.

இவரது மறைவு குறித்து நாகலாந்து ஆளுநர் மேதகு இல. கணேசன் அவர்கள் ஆசிரியர் நம்பி நாராயணனுக்கு வரைந்த இரங்கல் செய்தியில் கூறியதாவது:

“அன்புள்ள திரு.நம்பி நாராயணன், எனது நண்பரும், சிறந்த அறிவாற்றல் கொண்டவரும் அதே நேரத்தில் அடக்கமும், எளிமையும் கொண்டவரும், ஒரே நாடு இதழுக்கு தன்பங்குக்கு தொண்டாற்றியவருமான திரு ஸ்ரீதரன் அமரத்துவம் எய்திவிட்ட செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவரது மறைவால் வருந்தும் அவரது மனைவிக்கும், குடும்ப உறுப்பினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.” இல.கணேசன் ஆளுநர், எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நாடு இதழின் பதிப்பாளரும், பா.ஜ.க. மாநில பொருளாளருமான எஸ்.ஆர்.சேகர் விடுத்துள்ள செய்தியில்,

அதிர்ச்சி தரும் செய்தி
நெஞ்சம் கனக்கிறது
நமது ஆசிரியர் குழுவின் மிக முக்கியமான பங்களிப்பாளர், அறிவு ஜீவி திரு ஸ்ரீதரன் ஜி அவர்களுடைய மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர்கள் குடும்பத்துக்கு ஒரேநாடு சார்பில் ஆழ்ந்த இரங்கல். அவரது பிரிவு மறைவு ஒரே நாடு பத்திரிக்கைக்கும், தேசிய உள்ளம் கொண்டோருக்கும் மிகப்பெரும் இழப்பு.

அன்னாரது ஆன்மா ஆண்டவன் திருவடி அடைய பிரார்த்திக்கிறோம், அவரது குடும்பத்திற்கு மீண்டும் ஆழ்ந்த இரங்கலை ஒரே நாடு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம், என இரங்கல் தெரிவித்துள்ளார்.
நேற்று மதியம் நடந்த அவரது இறுதி யாத்திரையில், ஆசிரியர் நம்பி நாராயணன் துணை ஆசிரியர்கள் ஆர் பி முருகேசன், ராணா மற்றும் ஒரே நாடு கட்டுரையாளர் குழுவை சேர்ந்த கரிகாலன், வாசன், ஓகை நடராஜன், முனைவர் இரா காயத்ரி சுரேஷ், ப.நாகராஜன், மெய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். பாஜக சார்பில் மாநில துணைத்தலைவர் டால்பின் ஸ்ரீதர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினார்.

“ஒரே நாடு, ஒரே நாடு” என மூச்சுக்கு மூச்சு பேசி வந்த அவரது இறுதிச் சடங்கில் ஆசிரியர் நம்பிநாராயணன் துணை ஆசிரியர் ராணா, கட்டுரையாளர்கள் கரிகாலன், வாசன் ஆகியோர் அவரை ‘திருநாட்டிற்கு எழுந்தருளச் செய்தது’ அவருக்கு மிகுந்த திருப்தி அளித்திருக்கும் என திருமதி ஸ்ரீதரன் அவர்கள் இன்று (29.02.2024) காலை நம்மிடம் தெரிவித்தார்.

திரு இரா. ஸ்ரீதரன் அவர்களின் மறைவிற்கு ஒரே நாடு தனது ஆழ்ந்த இரங்கலை அவருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் தெரிவித்துக் கொள்கிறது. பிரிந்த அவரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் பொற்பாதங்களில் சென்று சேர பிரார்த்தனை செய்கிறது.

ஆசிரியர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top