சட்டம் ஒழுங்கை பராமரிக்க தவறிய காங்கிரஸ் கட்சி உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரூ ஒயிட்பீல்டு குந்தலஹள்ளியில் பிரபல ராமேஸ்வரம் கபே உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் மிகவும் பிரபலமானது. உணவகத்தை சுற்றியுள்ள அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று சாப்பிட்டு வருவது வழக்கம். காலை முதல் இரவு வரை மக்கள் கூட்டம் அலைமோதும்.
அதே போன்று நேற்று (மார்ச் 1) மதியம் சாப்பிட சென்ற மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன. இதில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் என 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வெடிகுண்டு வெடிப்பை தொடர்ந்து சம்பவ இடத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பான விசாரணையை துரிதப்படுத்தினர்.
மேலும், பாரதிய ஜனதா ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியாக இருந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் அங்கு சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாகவே பிரபலமான உணவகத்தில் வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. காயத்துடன் தப்பினர்.
இந்த நிலையில், வெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக முன்னாள் முதல்வரும், பாஜக நிர்வாகியுமான பசவராஜ் பொம்மை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தேசவிரோதிகளுக்கு ஆளும் கட்சித் தலைவர்களின் ஆதரவு பெருகி வருவதால் காவல்துறையினரின் மன உறுதி குறைந்துள்ளதாகவும், காவல்துறை இடமாற்றத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், திறமையற்றவர்கள் முக்கிய பதவிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சமூக விரோதிகள் தற்போது ஊருக்குள் எளிதாக நடமாடுகிறார்கள். பெங்களூருவில் வெடிகுண்டு வைக்கத் துணிந்துள்ளனர். இந்த தாக்குதல் தீவிரவாதம் தொடர்புடையது. பெங்களூரில் சில ஸ்லீப்பர் செல்கள் உள்ளன. பாஜக ஆட்சி காலத்தில் 15 ஸ்லீப்பர் செல்களை கண்டுபிடித்து சிறைக்கு அனுப்பினோம். இதனை செய்ய தவறிய சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.