திமுகவை போல, தங்கள் குடும்பத்தினர் பெயர்களை திட்டங்களுக்கு வைத்து கொள்ளும் வழக்கம் ,பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இல்லை என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆட்சிக்கு வந்ததில் இருந்து, குழுக்கள் மேல் குழுக்கள் மட்டுமே அமைத்துக் கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது அதில் சலிப்பு தட்டி, மத்திய அரசின் திட்டங்களின் பெயரை மட்டும் மாற்றிச் செயல்படுத்தும் திமுக அரசின் திட்டங்கள் முறையாகச் செயல்படுகிறதா என்பதைக் கண்டறிய, ‘நீங்கள் நலமா’ என்று ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார்.
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தலில் திமுக நிர்வாகிகள் தொடர்பு, பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான திமுகவினரின் வன்கொடுமை, அமைச்சர்களின் மதவெறுப்புப் பேச்சு, அத்தனை துறைகளிலும் ஊழல், ஊழல் வழக்குகளில் சிறைக்குச் செல்லக் காத்துக் கொண்டிருக்கும் அமைச்சர்கள், ஏழை எளிய மக்களுக்கெதிரான திமுகவின் அராஜகம் என, தான் இருக்கும் அறையை விட்டு வெளியே சற்று எட்டிப் பார்த்தாலே, மக்கள் யாரும் நலமாக இல்லை என்று தெரிந்து கொள்ள வேண்டியதை, புதிதாக ஒரு திட்டம் அறிவித்து, அதற்கு ஒரு பெயரும் சூட்டித் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில்தான் தமிழக முதலமைச்சர் இருக்கிறார் என்பது தமிழக மக்களுக்கு துரதிருஷ்டவசமானது.
பெயர் சூட்டும் வைபவத்துக்கு எட்டு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள். அதில், மக்களின் வாழ்வினை மேம்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்களாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், ஒலிம்பிக் தேடல் என நான்கு முக்கியமான மத்திய அரசின் திட்டங்களை வரிசைப்படுத்திவிட்டு, ஏழாவது பக்கத்தில், மத்திய அரசு என்ன செய்தது என்று நகைச்சுவை செய்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்.
குறிப்பாக, மக்களைத் தேடி மருத்துவம் என்று திமுக பெயர் வைத்திருக்கும் திட்டமானது, கடந்த 2017 ஆம் ஆண்டு மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலே செயல்படத் தொடங்கிய மக்கள்தொகை அடிப்படையிலான தொற்றா நோய்கள் பரிசோதனை (PBS -NCD) திட்டம். இந்தத் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு வழங்குகிறது.
இவை போக, மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்திற்கும், போகிற போக்கில் திமுக ஸ்டிக்கரை ஒட்டிச் சென்றிருக்கிறார். மேலும், அவர் கூறியிருக்கும் ‘முதல்வரின் முகவரி’ திட்டத்துக்கும், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்துக்கும், தற்போது புதியதாகப் பெயர் வைத்திருக்கும் ‘நீங்கள் நலமா’ திட்டத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
இவை ஒரு புறம் இருக்க, சென்னை மற்றும் தென்மாவட்டங்கள் சந்தித்த பெருமழை மற்றும் வெள்ளப் பாதிப்பு நிவாரண நிதியாக, 37 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் கேட்டதாகப் மிகப் பெரிய பொய் ஒன்றைக் கூறியிருக்கிறார் முதலமைச்சர். பாராளுமன்றத்தில், திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி அவர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த பதிலில், மிக்ஜாம் புயல் நிவாரணமாக ரூ.7,033.45 கோடியும், வெள்ளப் பாதிப்பு நிவாரணமாக ரூ.8,612.14 கோடியும் மட்டுமே கேட்டு தமிழக அரசு கோரிக்கை வைத்திருப்பதாகவும், கடந்த ஆண்டு மத்திய அரசு வழங்கிய மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் ரூ.813.15 கோடி தமிழக அரசிடம் கையிருப்பு இருப்பதாகவும், மேலும் மத்திய அரசின் பங்காக தற்போது 900 கோடி ரூபாய் வழங்கியிருப்பதாகவும் தெளிவாக கூறியிருந்தார்.
உண்மை இப்படி இருக்கையில், முதலமைச்சர் குறிப்பிடும் 37 ஆயிரம் கோடி ரூபாய் கோரிக்கை, யாரிடம் வைக்கப்பட்டது என்றும், எந்த வகையில் 37 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் கணக்கிடப்பட்டது என்பதையும், முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
மேலும், மாநிலப் பேரிடர் நிதியிலிருந்தும், அரசுத் துறைகளில் இருந்தும் ரூ.3,406.77 கோடி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர். மாநிலப் பேரிடர் நிதி என்பதே மத்திய அரசு வழங்கும் நிதிதான் என்பது முதலமைச்சருக்குத் தெரியாதா என்ன?
அது தவிர, ரூ. 3,406.77 கோடி நிதியில் மேற்கொண்ட நிவாரணப் பணிகளுக்கு, அதை விடப் பத்து மடங்குக்கும் அதிகமாக, 37 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்டதன் மர்மம் என்ன?
மத்திய அரசு, தமிழகத்தில் சுமார் 40 லட்சம் விவசாயிகளுக்கு, பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், வருடத்திற்கு ரூ.6,000-ஐ மூன்று தவணைகளாக வழங்கி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில், பதினைந்து தவணைகளில், ரூ.30,000/-, தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நேரடியாக ஒவ்வொரு விவசாயின் வங்கி கணக்கிற்கு மத்திய அரசு நேரடி பணப்பரிவர்த்தனை மூலமாக நிதி அளித்து வருவது முதல்வருக்கு தெரியாமல் போனது ஆச்சரியமே.
பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம், இலவச கழிப்பறைகள் திட்டம், உர மானியம், பயிர் காப்பீடு திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், சமையல் எரிவாயு மானியம், அடல் ஓய்வூதியத் திட்டம், பிரதமரின் உயிர் காப்பீடு திட்டம், மருத்துவக் காப்பீடு திட்டம், ஆயுள் காப்பீடு திட்டம், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்காக முத்ரா கடனுதவி, தெருவோர வியாபாரிகளுக்கான ஸ்வநிதி திட்டம் என, பொதுமக்களுக்கு நேரடியாகப் பயன்பெறும் மத்திய அரசின் திட்டங்கள் ஏராளம். அவை எல்லாம் அரசின் திட்டங்களாகவே செயல்படுத்தப்படுகின்றனவே தவிர, திமுகவைப் போல, தங்கள் குடும்பத்தினர் பெயர்களை திட்டங்களுக்கு வைத்துக் கொள்ளும் வழக்கம், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கு இல்லை.
தென் மாவட்ட மக்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த போது, இண்டி கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்குச் சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது அதை மறந்து விட்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறார். முதலமைச்சர், தமது இருக்கையின் பொறுப்பை உணர்ந்து அறிக்கை வெளியிட வேண்டும். திமுகவினரை வேண்டுமானால் பொய்களைக் கூறி ஏமாற்றிக் கொள்ளுங்கள். தவறான தகவல்களைக் கூறி பொதுமக்களை மீண்டும் ஏமாற்ற, பாஜக அனுமதிக்காது என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.