நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வலி நிவாரண மாத்திரையை நீரில் கரைத்து போதை ஊசியாக பயன்படுத்திய 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து 10 ஆயிரம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டம், வெப்படை அருகே உள்ள சாமுண்டூர் மயான முட்புதர்களில் போதை மாத்திரைகளும், ஒரு முறை பயன்படுத்தும் ஊசிகளும் இருப்பதாக வெப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
காவல் துறையினரின் விசாரணையில், இளைஞர்கள் சிலர் இரவு நேரங்களில் ஒன்று சேர்ந்து தங்களுக்கு போதை வருவதற்காக மாத்திரையை நீரில் கரைத்து ஊசியாக தங்கள் நரம்புகளில் செலுத்திக் கொள்வது தெரிய வந்தது. இது குறித்து வெப்படை காவல் துறையினர் மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பள்ளிபாளையம் மற்றும் வெப்படை பகுதியில் உள்ள சில இளைஞர்கள், கட்டிட வேலைக்கு செல்வோர், ஆன்லைன் மூலம் பெறப்படும் வலி நிவாரண மாத்திரையை நீரில் கரைத்து தங்கள் கைகளில் ஊசி மூலம் செலுத்தி போதையோடு உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில், பள்ளிப்பாளையம், கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 15 இளைஞர்களை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் வலி நிவாரண மாத்திரையை போதைக்காக தங்கள் நரம்புகளில் செலுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதற்கான மாத்திரைகளை ஆன்லைனில் பெற்று, விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர்களிடம் இருந்து சுமார் 10 ஆயிரம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகம் போதைப் பொருள் தலைமையிடமாக மாறி வருகிறதா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சட்டம், ஒழுங்கை பராமரிக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார். தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருக்கிறார். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் போதைப் பொருள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
திமுக கட்சியை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர்தான் சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தல் தொழில் செய்து வந்துள்ளார். அதனை டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார்தான் கண்டறிந்தனர்.
ஆனால் முதல்வர் ஸ்டாலின், ஜாபர் சாதிக் கை அயலக அணி நிர்வாகியாக நியமித்து கண்ணும் கருத்துமாக தமிழகத்தில் பாதுகாத்து வந்துள்ளார் இத்தனை நாட்கள். அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடத்திலும் நெருக்கமாக இருந்துள்ளார் என்பதும் புகைப்படம், வீடியோக்கள் மூலம் பொதுமக்கள் அறிந்துள்ளனர். இனியாவது விழித்துக்கொண்டு போதைப் பொருள் நடமாட்டத்தை ஸ்டாலின் கட்டுப்படுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.