போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து சென்னை வள்ளூவர் கோட்டத்தில் பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக இன்று (மார்ச் 12) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது, தமிழகமெங்கும் போதை ஒழிப்புக்கு 50,000 சிறப்பு பூத் கமிட்டி கூட்டம் நடைபெறும் என அறிவித்தார்.
மேலும் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி அதிர்ச்சி மிகுந்த ஒரு செய்தியை பார்த்தோம். சாதாரண மனிதரைப் போலவும்,அரசியல் கட்சியினர் போன்றும், சினிமா தயாரிப்பாளராகவும் வலம் வந்துக்கொண்டிருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் உள்ளிட்ட கூட்டாளிகள் பிடிபட்டனர். இவர்கள் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு போதைப் பொருள் கடத்தியுள்ளனர்.
அதன் பின் பிப்ரவரி 28ஆம் தேதி மறுபடியும் குஜராத் கடல் பகுதியில் தமிழகத்திற்கு போதைப் பொருள் அனுப்புவதற்காக வந்த கடத்தல் கும்பல் பிடிப்பட்டது. இதையும் நாம் பார்த்தோம்.
அதன் பின்னர் மார்ச் 1ஆம் தேதி மதுரையில் டிஆர்ஐ சார்பில் போதைப் பொருள் பிடிப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் ராமநாதபுரத்தில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதம் காலமாக தொடர்ச்சியாக தமிழக மக்களையே அதிர்ச்சிக்கு இந்த கஞ்சா கடத்தல் கும்பல் உள்ளாக்கியுள்ளது.
நமக்கு தெரியும் எப்போது திமுகவினர் ஆட்சிக்கு வந்தார்களோ அப்போது முதலே அதிர்ச்சியில் உள்ளோம். இப்போது ஜாபர் சாதிக் வந்து நமக்கு எல்லாம் அதிர்ச்சி கொடுக்கவில்லை. பள்ளிக்கூடத்திற்கு செல்லக்கூடிய பிள்ளைகள் பீர் பாட்டிலோட வருவதை நாம் திடீரென்று பார்க்கிறோம். ஒரு அரசு பள்ளியின்மாணவச்செல்வங்கள் ஆசிரியர்களிடம் தகராறு செய்கின்றனர்.
பள்ளிக்கூடத்திற்கு எடுத்துச்செல்லக்கூடிய புத்தக பையில் தேவையில்லாத விஷயங்கள் உள்ளது. இவை எல்லாம் அதிர்ச்சியாக கடந்த 33 மாத காலமாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். இப்போது சாதாரணமாக எல்லோரும் என்ன பேச ஆரம்பித்திருக்கிறோம் என்றால்? என்ன அண்ணே திமுக வந்த பின்னர் கஞ்சா புழக்கம் அதிகமாகியுள்ளது. தேவை இல்லாத ஆட்கள் எல்லாம் நடமாடுகிறார்கள். மிக எளிதாக போதைப் பொருள் கிடைக்கிறது. கல்லூரியில் கிடைக்கிறது. அவை தற்போது ஹாஸ்டல் வரைக்கும் போய்விட்டது.
இத்தனை ஆண்டுகாலமாக நாம் பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் பிப்ரவரி 15ஆம் தேதியில் இருந்து ஊர்ஜினம் ஆகியுள்ளது. இவர்கள் தனி நபர்கள் கிடையாது. இந்த போதைக்கும்பல் அரசியல் கட்சியின் நிழலில்தன்னுடையசாம்ராஜ்ஜியத்தை விஸ்தாரமாக்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் இளைய சமூதாயத்தினரை சீரழித்துக்கொண்டிருக்கின்றனர்
இன்று மக்கள் பாரதிய ஜனதா கட்சியைப் பார்த்து என்ன கேட்கிறார்கள்? 60 வருஷமாக மாற்றி, மாற்றி ஓட்டுப்போடுறோம். எல்லாக்கட்சியும் சாராயத்தை வைத்து தன்னை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த கட்சியில் இருப்பவர்களே சாராயம் விற்கிறார்கள். போதைப்பொருள் விற்கின்றனர்.
பாரதிய ஜனதா கட்சி தனித்துவமான கட்சி என்று சொல்கிறீர்கள். என்ன வித்தியாசமாக செய்வீர்கள் என மகளிர், குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் சேர்ந்து இந்த கேள்வியை எழுப்புகின்றனர்.
ஆர்ப்பாட்டம் என்பது ஒரு ஜனநாயகத்தில் அரசைக் கண்டித்து சாமானிய மனிதன் பேச முடியாது. வீட்டில் உள்ள மின்சாரம், குடிநீர் இணைப்பை துண்டித்து விடுவார்கள். அதனால்தான் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தஅரசியல் கட்சிகள் தேவைப்படுகிறது. தைரியமாக வந்து அரசியல் கட்சிகள் பேசுகின்றனர். கண்டனம் ஆர்ப்பாட்டம் முக்கியம் கிடையாது. போதைப் பொருள் பற்றி விழிப்புணர்வை மக்கள் முன் எடுத்துச்சொல்ல வேண்டும்.
அதாவது நாளையில் இருந்து (மார்ச் 13 முதல் 19) 7 நாட்கள் வரை நமது பாரதிய ஜனதா கட்சியின் ஒவ்வொரு தொண்டனும், தலைவனும் இந்த 7 நாளில் 15 மணி நேரம் போதைப் பொருளை ஒழிப்பதற்காக களத்தில் நாங்கள் வேலை செய்யப்போகிறோம்.
ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணி நேரம் இருக்கலாம். பள்ளிக்கூடம், கல்லூரிக்கு போய் பேசுங்கள். போதைப்பொருள் ஒழிப்பு பலகையை வைத்துக்கொண்டு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் போய் மக்களை சந்தித்து பேசுங்கள்.
பேருந்து நிலையத்தின் வெளியே ஒரு பத்து பேர் சேர்ந்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள். அதை எல்லாம் தாண்டி மருத்துவரை அழைத்து வந்து மக்களிடம் ஆலோசனை முகாம் நடத்துங்கள். போதை மறுவாழ்வு மையத்திற்கு மக்களை அழைத்துச் சென்று அவர்கள் படும் பிரச்சனைகளை காட்டுங்கள். இது ஒரு அரசியல் கட்சியாக சாமானிய மனிதராக நம்மால் செய்ய முடியும்.
சனிக்கிழமை 16ஆம் தேதி 11 மணிக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பிற்காக தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் சிறப்பு பூத் கமிட்டி கூட்டம் போடப்படும். அதில் உங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களை அழைத்து பூத் கமிட்டியில் உட்கார வைத்து பாஜகவின் கொள்கைகளை எடுத்துக்கூறுங்கள்.
தமிழகத்தில் போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்றால் டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
இவ்வாறு தலைவர் அண்ணாமலை பேசினார்.