சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதி மீது, பீகாரில் மத உணர்வைப் புண்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சனாதன தர்மத்திற்கு எதிராக பேசியிருந்தார்.
உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு, நாடு முழுவதும் இருந்து கடும் கண்டனம் எழுந்தது. பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல பாஜக தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். அதே நேரம் இந்து அமைப்புகளும் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தன.
சனாதன தர்மம் ஒழிப்பு பற்றி பேசிய உதயநிதி மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், உதயநிதிக்கு எதிராக பீகார் மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் அர்ரா நகர காவல் நிலையத்தில், உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 298-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.