சி.ஏ.ஏ., சட்டம் எங்களுக்கு ராம ராஜ்ஜியம் போன்றது: ஜோத்பூரில் இந்து அகதிகள் கொண்டாட்டம்!

பாரத தேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமலுக்கு வந்ததை வரவேற்கும் வகையில் ஜோத்பூரில் உள்ள இந்து அகதிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தானில் இருந்து பாரத தேசத்திற்கு வந்த இந்து அகதிகள் ஏராளமானோர் ராஜஸ்தான் மாநிலம் பார்மர், பிகானேர் மற்றும் ஜோத்பூரில் வசிக்கின்றனர்.

இந்த நிலையில், (மார்ச் 11) அன்று சி.ஏ.ஏ., சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. இதனை நாடு முழுவதும் மக்கள் வரவேற்றனர். அதே போன்று ஜோத்பூர் இந்து அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் கடந்த (மார்ச் 11) இரவு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வீட்டு வாயில்களில் விளக்கு ஏற்றியும் பட்டாசு வெடித்தும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இங்குள்ள அகதிகள் கூறும்போது, “இது எங்களுக்கு உண்மையான ராம ராஜ்ஜியம் போன்றது. சி.ஏ.ஏ. தற்போது நனவாகி விட்டது. இதற்காக நாங்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தோம். அகதிகளாக பரிதவிக்கும் நாங்கள் சிறப்பான வாழ்க்கை வாழ இது உதவும். நீண்ட காலமாக குடியுரிமைக்காக காத்திருக்கும் பலருக்கும் இது உதவியாக இருக்கும். அவர்கள் விரைவில் இந்திய குடிமக்களாக மாறுவார்கள் என நம்பலாம்” என்று தெரிவித்தனர்.

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் அகதிகளின் நலனுக்காக சீமந்த் லோக் சங்கதன் என்ற அமைப்பு பாடுபட்டு வருகிறது. ஜோத்பூரில் சுமார் 35,000 இந்து அகதிகள் குடியுரிமைக்காக காத்திருப்பதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து வரும் இந்து அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இந்த அமைப்பு கூறுகிறது.

இது குறித்து பாகிஸ்தான் அகதிகள் கூறும்போது, “பகவான் ராமரின் அவதாரமாக பிரதமர் நரேந்திர மோடியை கருதுகிறோம். எங்களுக்கு வாழ்வளித்த அவருக்கு நன்றியை உரித்தாக்குகிறோம்’’ என்று தெரிவித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top