பெங்களூரில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு தொழிற்சாலைகளையும் விட்டு வைக்கவில்லை. தண்ணீர் பிரச்னையால் தொழிற்சாலைகளில் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூர் மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு தினந்தோறும் அதிகரிக்கிறது. புறநகர் பகுதிகளில் வாரம் ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிப்பதால் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீர் இன்றி அவதியுற்று வருகின்றனர்.
தண்ணீர் தட்டுப்பாடு தற்போது தொழில் பகுதிகளையும் விட்டு வைக்கவில்லை. தென் ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டையான பீன்யா பகுதியில் 16,000 சிறு, குறு தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு இன்ஜினியரிங் ஒர்க்ஸ், மருந்துகள் தயாரிப்பு, ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள், பேப்ரிகேஷன், மின் மாற்றி உதிரி பாகங்கள் தயாரிப்பு என பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
சில தொழிற்சாலைகளில் செயல்படும் இயந்திரங்களை, தொடர்ந்து குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இதற்கு தண்ணீர் அவசியம். ஆனால் 10 நாட்களாக தண்ணீர் கிடைக்காமல் தொழிற்சாலைகள் நெருக்கடியில் சிக்கியுள்ளன. தொழிற் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் வற்றியுள்ளன. எனவே உரிமையாளர்கள் டேங்கர் நீரை பயன்படுத்தி தொழிற்சாலையை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி குறையும் என அஞ்சப்படுகிறது. இது அரசு கருவூலத்துக்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும்.
இது தொடர்பாக தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் ஆரீப் கூறியதாவது:
பிப்ரவரி இறுதி வரை தண்ணீர் தட்டுப்பாடு அவ்வளவாக இருக்கவில்லை. ஆனால் இப்போது பிரச்னை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆழ்துளை கிணறுகளும் வற்றுகின்றன. இதே நிலை நீடித்தால் தொழிற்சாலைகளை நடத்துவதே கஷ்டமாக இருக்கும். உற்பத்தி நிற்கும்.
இங்கு பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு கேன் குடிநீர் வாங்குகிறோம். பீன்யா தொழிற் பகுதியில் 98 சதவீதம் சிறிய தொழிற்சாலைகள் தான். இரண்டு சதவீதம் மட்டுமே பெரிய தொழிற்சாலைகள் உள்ளன.
பெரும்பாலான சிறிய தொழிற்சாலைகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு வசதி இல்லை. இவைகள் பயன்படுத்தும் தண்ணீர் சாக்கடையில் சேர்கிறது. பெரிய தொழிற்சாலைகள் மட்டும் இத்தகைய வசதிகள் கொண்டுள்ளன.
எங்களுக்கு காவிரி நீர் தாருங்கள் என நாங்கள் கேட்கவில்லை. சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரையாவது தாருங்கள் என அரசிடம் வேண்டுகிறோம். ஏப்ரல், மே மாதங்களில் என்ன செய்வது என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது. டேங்கர் தண்ணீரும் கிடைக்கா விட்டால் தொழிற்சாலைகளை மூட வேண்டிய சூழல் வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் அரசின் நிர்வாகத் திறன்மையின்மையால் தற்போது பொதுமக்கள் மட்டுமின்றி தொழிற்சாலைகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. சரியாக திட்டமிட்டு நகர் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை சரியாக தூர்வாரி பராமரித்திருந்தாலே குடிநீர் பிரச்சனை இந்த அளவிற்கு மோசமாகியிருக்காது. கடந்த கால பாஜக ஆட்சியில் அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் நிரம்பியிருந்தது. தற்போதைய நிலையில் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது.இனிமேலாவது ஆட்சியாளர்கள் நீர்நிலைகளை தூர்வாரி தண்ணீர் தேங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது பெங்களூரு நகர் வாசிகளின் கோரிக்கையாக உள்ளது.