குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அகதிகளால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் சிறுபான்மையின மக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கூறியதாவது:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதால் கற்பனை செய்ய முடியாத எண்ணிக்கையிலான மக்களுக்கு கதவுகள் திறந்துவிடப்படுகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து அவர்கள் நம் நாட்டுக்குள் குடியேறுவார்கள். எனவே வெளிநாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு வேலை, வீடு, தேவையான அடிப்படை வசதிகளை கொடுப்பது எப்படி முடியும் என்றார்.
மேலும், கடந்த 1947ம் ஆண்டை விட பெரிய குடியேற்றம், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதால் நடக்கும். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் 2.5 கோடி முதல் 3 கோடி வரை சிறுபான்மையினர் உள்ளனர்.
பிற நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு, நம் நாட்டின் வரி செலுத்துவோரின் பணத்தை செலவிடுவதை ஏற்க முடியாது. சி.ஏ.ஏ.,வை அமல்படுத்துவது, நாட்டை பாதுகாப்பற்றதாக மாற்றும். சட்டம் – ஒழுங்கு கெடும்.
அகதிகளை தங்கள் வீடுகளுக்கு அருகில் குடியமர்த்தினால், பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்களா? இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிலையில், கெஜ்ரிவால் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டின் முன்பு பாகிஸ்தான் சிறுபான்மையின மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.