பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்து மத்திய அரசு நேற்று (மார்ச் 14) இரவு அறிவித்தது. இந்த விலை குறைப்பு இன்று (மார்ச் 15) காலை 6 மணி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சாமானிய மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வருகிறது. அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்களான பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுக்குள் வைத்திருந்தது. மற்ற நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் விலை உயராமல் மத்திய அரசு பார்த்துக் கொண்டது.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைத்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.
பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி மற்றும் இதர வரிகள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவதால், ஒவ்வொரு மாநிலத்திலும் விலை மாறுபடும்.
டெல்லியில், டீசல் லிட்டருக்கு 89.62 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது தற்போது, லிட்டருக்கு 87.62 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில், லிட்டர் 96.72 ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல், 94.72 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.88 ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று காலை 6:00 மணி முதல் அமலுக்கு வந்தது. வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 100 ரூபாய் குறைத்து பிரதமர் நரேந்திர மோடி அதிரடியான அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டார்.
சமையல் எரிவாயு விலை குறைப்புக்கு தங்களது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் பெண்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.தற்சமயம் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு லிட்டருக்கு ரூபாய் இரண்டு குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.