ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகில பாரத பிரதிநிதி சபா என்றழைக்கப்படும் தேசிய பொதுக்குழுவின் மூன்று நாள் கூட்டம், அந்த அமைப்பின் தேசிய தலைமை அலுவலகம் அமைந்துள்ள மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நேற்று (மார்ச் 15) துவங்கியது.
ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே உட்பட 28 மாநிலங்கள், எட்டு யூனியன் பிரதேசங்களில் இருந்து 1,500 பேர் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளதாலும், அடுத்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., நூற்றாண்டு விழா நடக்க உள்ளதாலும் இந்த பொதுக்குழு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
முதல் நாள் கூட்டத்தில் கடந்த ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ்.,ஸின் செயல்பாடுகள், சாதனைகள், சந்தித்த சவால்கள் குறித்து பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே அறிக்கை அளித்தார். அப்போது முக்கிய அறிவிப்பு ஒன்றையும், அவர் வெளியிட்டார்.
ஆர்.எஸ்.எஸ்.,ஸில் பயிற்சி முகாம்கள் என்பது முக்கியமானது. ஏழு நாட்கள் ஆரம்ப நிலை, 20 நாட்கள் முதலாம் ஆண்டு, 20 நாட்கள் இரண்டாம் ஆண்டு, 30 நாட்கள் மூன்றாம் ஆண்டு என நான்கு கட்டங்களாக பயிற்சி முகாம்கள் நடக்கும். அதில் மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகத்தில் மட்டுமே நடக்கும்.
தற்போது, பயிற்சி முகாம்களில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிதாக மூன்று நாட்கள் அறிமுக பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். அடுத்த ஏழு நாட்கள் ஆரம்ப நிலை பயிற்சி முகாம் நடத்தப்படும். முதலாம் ஆண்டு பயிற்சி முகாம் 20 நாட்களுக்கு பதிலாக 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம், மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம்களுக்குப் பதிலாக பொறுப்பாளர்கள் மேம்பாட்டு முகாம்கள் 20 நாட்கள், 25 நாட்கள் என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.