‛‛மக்களின் அன்பு, ஆதரவால் எனக்கு நம்பிக்கையும், உற்சாகமும் கிடைக்கிறது. காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து, ஜிஎஸ்டி அமலாக்கம் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்க முடிந்தது’’, என நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
நாட்டு மக்கள் அனைவருமே எனது குடும்பத்தினர். 140 கோடி மக்களின் நம்பிக்கையும் ஆதரவுமே எனக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கடும் முயற்சி மேற்கொண்டோம். கடந்த 10 ஆண்டுகளில் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றமே, எங்களின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி.
பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தது, மின்சார வசதி, அனைவருக்கும் காஸ் சிலிண்டர், சுத்தமான குடிநீர், ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் இலவச மருத்துவ சிகிச்சை, விவசாயிகளுக்கு நிதியுதவி, பெண்களுக்கு உதவி உள்ளிட்ட பல திட்டங்கள், உங்களின் நம்பிக்கை காரணமாகவே சாத்தியமானது.
ஜிஎஸ்டி அமலாக்கம், காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து, முத்தலாக் ரத்து, மகளிர் இட ஒதுக்கீடு, நாடாளுமன்ற புதிய கட்டடம், பயங்கரவாதம் மற்றும் நக்சலைட் பிரிவினைவாதம் ஆகியவற்றுக்கு எதிரான கடும் நடவடிக்கை ஆகிய அனைத்தும் உங்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவால் சாத்தியமானது.
நாட்டின் நலனுக்காக தைரியமான முடிவுகளை எடுக்கவும், லட்சியத் திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்தவும் உங்களின் ஆதரவு எனக்கு பலம் அளித்தது. வளர்ந்த பாரதத்தை உருவாக்க, உங்களின் ஆலோசனைகள், சிந்தனைகள் மற்றும் ஆதரவு தேவை. நாம் ஒன்றாக இணைந்து, நமது நாட்டை உயரத்திற்கு கொண்டு செல்வோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.