அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க பயன்படுத்தப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்தும், அதுபற்றிய தகவல்களை வெளியிடவும் பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது:
இந்திய அரசியலில் கருப்பு பணத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தேர்தல் பத்திரம் திட்டம் கொண்டு வரப்பட்டது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்ததைவிட அதை மேம்படுத்தியிருக்கலாம் என நான் நம்புகிறேன். ஆனால் அதில் ஏதும் செய்ய முடியாது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறேன். தேர்தல் பத்திரம் மூலம் பாஜக ஆதாயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏனென்றால், பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கிறது. ராகுல் காந்தி இது ஒரு மிகப்பெரிய, மிரட்டி பணம் பறிக்கும் செயல் என்று தெரிவித்துள்ளார். அவருக்கு இவ்வாறு யார் எழுதி கொடுத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை’’ என்றார்.
மத்தியில் ஆட்சி மற்றும் 20 மாநிலங்களில் ஆட்சியில் உள்ள பாஜகவை விட மற்ற மாநில கட்சிகளான திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளே அதிகமாக தேர்தல் பத்திரம் மூலம் நிதி வாங்கியுள்ளது. எனவே இவர்கள் யாரை மிரட்டி பணம் பறித்துள்ளனர் என்ற கேள்வியை பொதுமக்களே எழுப்பியுள்ளனர்.