கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ‘‘ரோடு ஷோ’’ நிகழ்ச்சியில் சாலையின் இருபுறமும் திரண்ட பாரதிய ஜனதா தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர். பொய்க்கால் குதிரை வேடமிட்டும், வீணை இசைத்தும் பிரதமர் மோடியை இசைக் கலைஞர்கள் வரவேற்றனர்.
கர்நாடக மாநிலம் ஷிவமொகா விமான நிலையத்தில் இருந்து, தேர்தல் பிரசாரத்துக்காக இன்று (மார்ச் 18) மாலை கோவைக்கு பிரதமர் மோடி வந்தார். சாய்பாபா காலனியில் இருந்து துவங்கிய, ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று, மக்களை நோக்கி கையசைத்தப்படி காரில் சென்றார். அவருடன் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உடனிருந்தனர். சாலையின் இருபுறமும், கூடிய தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதமர் மோடியை மலர்தூவி வரவேற்றனர்.
இந்த ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சி வடகோவை, டி.பி.ரோடு வழியாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் வரை 2.5 கி.மீ., தூரம் நடைபெற்றது.
போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், 5,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இரவு, 7:05 மணிக்கு, ரேஸ்கோர்சில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்று பிரதமர் மோடி ஓய்வெடுக்கிறார். நாளை கோவையில் இருந்து விமானம் மூலம் பாலக்காட்டிற்கு பிரதமர் மோடி செல்கிறார். அதனை முடித்துக்கொண்டு சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாஜக கூட்டணிக்கு வாக்கு சேகரிக்கிறார்.