தமிழர்கள் கர்நாடகாவின் வளர்ச்சியில் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து கர்நாடகாவுக்கு பெரும் பங்களிப்பை அளித்துள்ளனர். எங்களுடன் நெருங்கிய கலாச்சார பிணைப்புகளைக் கொண்டு உள்ளனர், என மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த மார்ச் 1ஆம் தேதி கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் திடீர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பெல்லாரியில் ஒருவரை என்.ஐ.ஏ., கைது செய்துள்ளது.
இந்தச் சூழலில் பெங்களூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசும்போது, தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி வனப்பகுதியில் பயிற்சி பெற்ற சிலர் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டு வைத்துள்ளனர் என பேசினார்.
மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசியதை தவறுதலாக திரித்து திமுகவினர் பரப்பி வருகின்றனர். அவர்களுடன் இணைந்த முதல்வர் ஸ்டாலின், தமிழர்களை ஷோபா கரந்தாலாஜே அவமானப்படுத்திவிட்டார் என்பது போன்று எக்ஸ் வலைத்தளத்தில் கருத்துப் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடியாக மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
‘‘என் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு, நான் என்ன சொன்னேன் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது கருத்துக்கள் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதை உணர முடிகிறது. இதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
கிருஷ்ணகிரி வனப்பகுதியில் பயிற்சி பெற்ற, ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தொடர்பு கொண்டவர்கள் குறித்து மட்டுமே எனது கருத்து இருந்தது. தமிழ்நாட்டில் யாரேனும் ஒருவர் எனது கருத்தால் காயமடைந்திருந்தால் இதயத்தில் இருந்து நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும், எனது முந்தைய கருத்துக்களைத் திரும்பப் பெறுகிறேன்’’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில் முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ‘‘ஸ்டாலின் அவர்களே, உங்கள் ஆட்சியில் தமிழகம் என்ன நிலையில் இருக்கிறது? நீங்கள் செய்யும் அரசியல், இந்துக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் மீதான தாக்குதல்களை ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது. நீங்கள் கண்களை மூடி இருக்கும் போது ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் குண்டுவெடிப்புகள் அடிக்கடி நடக்கிறது.
உங்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.. ராமேஸ்வரம் குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர் கிருஷ்ணகிரி காடுகளில் பயிற்சி பெற்றவர். அதைத் தான் நான் குறிப்பிட்டேன். தமிழ் மக்கள் கர்நாடகா உடன் நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ளனர். தமிழர்கள் கர்நாடகாவின் வளர்ச்சியில் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்துள்ளனர். அவர்கள் கர்நாடகாவுக்கு பெரும் பங்களிப்பை அளித்துள்ளனர். எங்களுடன் நெருங்கிய கலாச்சார பிணைப்புகளைக் கொண்டு இருக்கிறார்கள்’’ என்று பதிவிட்டுள்ளனர்.
வழக்கம்போல திமுகவின் பொய் பரப்புரை செய்ய நினைத்தவர்களுக்கு உடனடியாக மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பதிலடி கொடுத்திருப்பதற்கு தமிழர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் முதன் முதலாக வள்ளுவர் சிலையை நிறுவியர் பாஜக முதல்வராக இருந்த எடியூரப்பாதான் என்பதை தமிழர்கள் அனைவரும் அறிவார்கள். எனவே ஸ்டாலின் தமிழர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் விரிசல் ஏற்படுத்தும் விதமாக கருத்து கூறுவதை நிறுத்த வேண்டும் என்பது கர்நாடகா தமிழர்களின் எண்ணமாக உள்ளது.