அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இல்லம் மற்றும் அவரது தோட்டத்தில் இன்று (மார்ச் 21) காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சி. விஜயபாஸ்கருக்கு இலுப்பூர் சௌராஷ்டிரா தெருவில் வீடு மற்றும் இலுப்பூர் அருகே உள்ள ஓலைமான் பட்டியில் தோட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள திருவேங்கை வாசலில் கல்குவாரி, இலுப்பூரில் ராசி தங்கும் விடுதி என பல்வேறு வகையான அசையும் சொத்துக்கள் ,அசையா சொத்துக்கள் உள்ளன.

இந்த நிலையில், இன்று காலை 8 மணி அளவில் இலுப்பூர் சௌராஷ்டிரா தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு மூன்று கார்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 பேர் கொண்ட குழுவினர் வந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விஜயபாஸ்கர் தற்போது சென்னை இல்லத்தில் உள்ளார். வீட்டில் அவரது தந்தை சின்னத்தம்பி மற்றும் தாய் அம்மா கண்ணு மட்டும் உள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜயபாஸ்கர் ஏற்கனவே அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஆர்.கே.நகர் தேர்தல் பண பட்டுவாடா, குட்கா முறைகேடு உள்ளிட்ட காரணங்களால் அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையின் அடிப்படையிலேயே தற்போது அவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும், மேலும் அவருக்கு சொந்தமான திருவேங்கை வாசலில் உள்ள கல்குவாரிகளில் அரசு அனுமதித்த அளவைவிட அதிகப்படியான கற்கள் வெட்டி எடுத்ததாக கூறப்படும் நிலையில், அவரது குவாரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் அந்த சோதனையின் தொடர்ச்சியாக தான் அமலாக்கதுறையினர் தற்போது சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் ஒருபோதும் தப்பிக்க முடியாது என்பது இந்த சோதனையின் மூலம் தெளிவாகிறது. அமலாக்கத்துறை முழு ஆவணங்களை திரட்டிய பின்னரே சோதனையை துவங்கியிருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top