நடைமுறைப்படுத்தப்படாத அறிவிப்புகள் வழங்கி சீர்மரபு பழங்குடியினர் மக்களை ஏமாற்றும் ஊழல் திமுக அரசு என தலைவர் அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும், குற்றப் பழங்குடியினர் சட்டத்தால் ஒடுக்கப்பட்டு, கல்வி, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி மறுக்கப்பட்ட மக்கள், சுதந்திரம் கிடைத்த பின்னர், 1952ஆம் ஆண்டில்தான் இந்தச் சட்டம் அகற்றப்பட்டு உண்மையான விடுதலைக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கினர். ஆனால் சென்னை மாகாணத்தில் அதற்கு ஐந்து ஆண்டுகள் முன்னரே, 1947ஆம் ஆண்டு, தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட பல தலைவர்களின் சீரிய முயற்சியால், குற்றப் பரம்பரை சட்டம் நீக்கப்பட்டு, தமிழகத்தில் 68 சமூகங்கள், சீர்மரபு பழங்குடியினர் (டி.என்.டி.) என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டனர்.
இந்தியா முழுவதும் பிற மாநிலங்களில் சீர்மரபினர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் மூலம், கல்வி, பொருளாதார வளர்ச்சி பெற்று முன்னேறிக் கொண்டிருக்கையில், பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக சீர்மரபுப் பழங்குடியினர் பிரிவை முதலில் அட்டவணைப்படுத்திய தமிழகத்தில், இதுவரை சீர்மரபுப் பழங்குடியினர் சமூக முன்னேற்றத்துக்கான நலத்திட்டங்கள் பெருமளவில் செயல்படுத்தப்படவில்லை எனத் தெரிகிறது.
குறிப்பாக, தமிழகத்தில் 1979ஆம் ஆண்டு வரை, சீர்மரபுப் பழங்குடியினர் சான்றிதழ் வழங்கப்பட்டு, அதன் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சலுகைகள் பெற்று வந்த 68 சமூகங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 1979ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று வெளியிடப்பட்ட தமிழக அரசாணை எண் 1310/1979ன் படி, சீர்மரபு வகுப்பினர் (டிஎன்சி) என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டனர்.
இதனால் சீர்மரபுப் பழங்குடியினர் சமூக முன்னேற்றத்துக்காக வழங்கப்பட்டு வந்த பல அரசுச் சலுகைகள் மறுக்கப்பட்டன.
இதனை அடுத்து, சீர்மரபுப் பழங்குடியினர் (டி.என்.டி.) பிரிவில் தங்களை மீண்டும் வகைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு, பல ஆண்டுகளாக, தொடர் கோரிக்கைகள் மூலமும், போராட்டங்கள் மூலமும் குரல் எழுப்பி வரும் மக்களுக்கு, இதுவரை உரிய நியாயம் கிடைக்கவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.
கடந்த 2018ஆம் ஆண்டு, தமிழக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையினர் சார்பாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை ஏற்று, கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று, ஒரு அரசாணை எண் 26/2019 வெளியிடப்பட்டது. இதன் மூலம் முந்தைய 1979ஆம் ஆண்டு அரசாணை எண் 1310/1979 திரும்பப் பெறப்பட்டது. அதே நேரத்தில் தமிழக அரசின் சலுகைகளைப் பெற சீர்மரபு வகுப்பினர் (டி.என்.சி.) என்ற சான்றிதழும், மத்திய அரசின் சலுகைகளைப் பெற சீர்மரபுப் பழங்குடியினர் (டி.என்.டி.) என்ற சான்றிதழும், வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் சலுகைகளைப் பெற, சீர்மரபு வகுப்பினர் (டி.என்.சி.) என்ற சான்றிதழே தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் சலுகைகளைப் பெற சீர்மரபுப் பழங்குடியினர் (டி.என்.டி.) சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இப்படி, இரண்டு சான்றிதழ்கள் வழங்காமல், சீர்மரபுப் பழங்குடியினர் (டிஎன்டி) என்ற ஒற்றைச் சான்றிதழே வழங்க வேண்டும் என்று, சீர்மரபுப் பழங்குடி பொதுமக்களும், சமூக அமைப்புகளும் மீண்டும் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், போராட்டங்கள் நடத்தியும், எந்தப் பழங்குடியினர் (டிஎன்டி) சான்றிதழும் அறிவிக்கப்பட்டது போல் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 30 அன்று, ஆலங்குளத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், திமுக ஆட்சிக்கு வந்தால், சீர்மரபுப் பழங்குடியினரின் (டிஎன்சி/ டிஎன்டி) என்ற இரட்டைச் சான்றிதழ் முறையை மாற்றி, டிஎன்டி என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்குவோம். சீர்மரபுப் பழங்குடியினர் ஆணையம் அமைக்கப்படும். சீர்மரபுப் பழங்குடியினர் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த, அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதிகளைக் கொடுத்தார்.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகியும், இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சுமார் 68 சமூக சீர்மரபுப் பழங்குடியின மக்களை வஞ்சித்து வந்த முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக டிஎன்டி என்ற ஒரே சான்றிதழ் வழங்கப்போவதாக ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.
ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை எண் 26/2019ல், உரிய திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளாமல், வெறும் அறிவிப்பு அளவிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இதனால், சீர்மரபுப் பழங்குடியின சமூக மக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். தேர்தல் நேரங்களில் வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுவிட்டு, நடைமுறையில் பொதுமக்களை வஞ்சிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் திமுக, பாராளுமன்றத் தேர்தலுக்காக நடத்தும் நாடகம் என்ற சந்தேகம் எழுகிறது. தேர்தல் முடிந்தவுடன், மீண்டும் இந்த அறிவிப்பைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள் என பொதுமக்கள் விரக்தி தெரிவிக்கின்றனர். குறிப்பாக திமுக மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லை.
எனவே, வெறும் விளம்பர அரசியலுக்காக அறிவிப்புகள் வெளியிடுவதையும், 68 சமூக சீர்மரபுப் பழங்குடியினர் சமூக மக்களை, வெறும் தேர்தல் வாக்குகளாக மட்டுமே எண்ணி, ஒவ்வொரு தேர்தலின்போதும் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து அவர்களை தொடர்ந்து ஏமாற்றி வருவதையும், திமுக உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
உடனடியாக, கடந்த 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை 26/2019ல், உரிய திருத்தங்கள் செய்து, சீர்மரபு வகுப்பினர் (டிஎன்சி) சான்றிதழைப் புழக்கத்தில் இருந்து நீக்கி, சீர்மரபுப் பழங்குடியினர் (டிஎன்டி) என்ற சான்றிதழ் மட்டுமே வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.