மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு நேற்று இரவு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், அங்கு இரண்டு மணி நேரம் சோதனை நடத்திய பின் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, 2021 – 22ம் ஆண்டுக்கான புதிய மதுபான கொள்கையை வகுத்தது. இதில் பல தனியார் மதுபான அதிபர்கள் பலன் அடைந்ததாகவும், அதற்காக பல கோடி ரூபாய் லஞ்சப்பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. அதை தொடர்ந்து புதிய மதுபான கொள்கை திரும்ப பெறப்பட்டது. இந்த விவகாரத்தில் நடந்துள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங், அக்கட்சியைச் சேர்ந்த விஜய் நாயர் உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயர் இடம் பெற்றுள்ளது. இது குறித்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் ஏமாற்றி வந்தார்.
இந்த நிலையில், தன் மீது கைது நடவடிக்கை எடுப்பதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்படி, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு நேற்று (மார்ச் 21) விசாரணைக்கு வந்தபோது, கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும், ‘சம்மன் அனுப்பப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது, ஏப்ரல் 22ல் விசாரணை நடத்தப்படும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், முதல்வர் கெஜ்ரிவால் வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மாலை சென்றனர். விசாரணைக்கு ஆஜராகும்படி ஒன்பதாவது முறையாக அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டது.
பின்னர், வீட்டை சோதனையிட தங்களிடம் வாரன்ட் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதை தொடர்ந்து இரண்டு மணி நேரம் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், கெஜ்ரிவாலின் மடிக்கணியில் இருந்து பல்வேறு, ‘டிஜிட்டல்’ ஆதாரங்களை பதிவிறக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நேரத்தில், கெஜ்ரிவால் கைது செய்யப்பட உள்ளதாக, தகவல் பரவியது. ஆம் ஆத்மி தொண்டர்கள் அவர் வீட்டின் முன் குவிந்தனர். இதனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். கெஜ்ரிவால் வீடு உள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆம் ஆத்மி தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
சோதனையின் முடிவில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.
கடந்த 9 சம்மனுக்கும் ஆஜராகாமல் ஏமாற்றி வந்த கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை நீதிமன்ற உத்திரவுப்படி கைது செய்திருப்பது குறித்து டெல்லி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஊழலுக்காக கட்சியை தொடங்கியவர் இப்படி ஊழலில் சிக்கியுள்ளாரே என்று கெஜ்ரிவால் மீது மக்கள் அதிருப்தியிலும் கோபத்திலும் உள்ளனர். வர உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.