கெஜ்ரிவால் கைது தொடர்பாக கருத்து கூறிய ஜெர்மனி தூதருக்கு மத்திய அரசு சம்மன்!

டெல்லி மதுபான ஊழல் வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் மார்ச் 21ம் தேதி கைது செய்தனர். பின்னர் அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் நேற்று (மார்ச் 22) ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவாலை 6 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், கெஜ்ரிவாலின் கைது குறித்து ஜெர்மனி நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘‘அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட விவகாரத்தை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயக கோட்பாடுகள் இந்த வழக்கில் பின்பற்றப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

இந்த நிலையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பான ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கருத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியாவில் உள்ள ஜெர்மனி தூதருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘டெல்லியில் உள்ள ஜெர்மனி தூதருக்கு இன்று சம்மன் அனுப்பப்பட்டு, நமது உள்விவகாரங்கள் குறித்த அவர்களின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற கருத்துக்கள் நமது நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவதாகவும், நமது நீதித்துறையின் சுதந்திரத்தை பறிப்பதாகவும் பார்க்கிறோம். இந்தியா, சட்டத்தின் ஆட்சியுடன் கூடிய துடிப்பான மற்றும் வலுவான ஜனநாயகம்.

ஜனநாயக நாடுகளில், அனைத்து சட்ட வழக்குகளிலும் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இதில் பக்கசார்புடைய கருத்துக்கள் தேவையற்றவை’’ என்று தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top