அரசியலில் திமுக இருப்பதே அவமானம். விஞ்ஞான ஊழல், குடும்ப ஆட்சி, வாக்குக்கு பணம் கொடுப்பது ஆகியவை திமுக வந்த பிறகுதான் உருவானது. இதனால்தான் ஈ.வெ.ரா. திமுகவை கடுமையாக எதிர்த்தார் என தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று (மார்ச் 25) நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நேர்மையான, ஊழலற்ற நல்லாட்சி தொடர, தமிழகமும் முக்கியப் பங்கு வகிப்பதற்காக, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசப்பட்டது.
இந்த கூட்டத்தில் தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள், மண்டலத் தலைவர்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைவர் அண்ணாமலை;
“கோவை மக்களவைத் தொகுதி முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை பார்க்க முடிகிறது. ஒதுங்கி இருந்தவர்கள் கூட அரசியல் மாற்றம் வேண்டும் என வருகின்றனர். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது, கோயம்புத்தூர் ஒரு புரட்சி செய்யும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து இருக்கின்றனர். 39 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதை களத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது.
அரசியலில் திமுக இருப்பதே அவமானம். விஞ்ஞான ஊழல், குடும்ப ஆட்சி, வாக்குக்கு பணம் கொடுப்பது ஆகியவை திமுக வந்த பிறகுதான் உருவானது. இதனால்தான் ஈ.வெ.ரா. திமுகவை கடுமையாக எதிர்த்தார்.
இன்று தனக்கென்று எதுவும் இல்லாமல் ஒரு பொம்மை முதலமைச்சராக இருக்கிறார் ஸ்டாலின். இவர் பிரதமர் மோடியை பற்றி பேச தகுதி இல்லை. தமிழக அரசின் கடன் 8 லட்சத்து 23 ஆயிரம் கோடியை தாண்டி இருக்கின்றது. இந்திய அரசியலில் இது போன்ற ஆட்சி நடந்ததில்லை.
எனக்கு அடையாளம் கொடுத்தது கோவை. அந்த கோவைக்கு நல்லது செய்வதற்கு வருகின்றேன். நாங்கள் வந்தால் வளர்ச்சியை கொண்டு வருவோம், மெட்ரோ ரயில் கொண்டு வருவோம்.
ஸ்மார்ட் சிட்டியில் அதிமுக கொள்ளையடித்த லிஸ்ட்டை வெளியே விடலாமா? 40 சதவீதம் கமிஷன் வாங்கியதை பேசலாமா? 33 மாதமாக தமிழகத்தில் லஞ்ச ஊழலை பற்றி அதிகம் பேசிய ஒரு தலைவரை காட்டுங்கள் பார்க்கலாம். பாஜக எங்கிருக்கிறது என்று கேட்டவர் கருணாநிதி. இன்று பாஜகவை திமுக திட்டாத நாளில்லை.
ஸ்மார்ட் சிட்டி, நொய்யல் என அனைத்து நலத்திட்டத்திற்கு கொடுத்தவற்றையும் கொள்ளையடித்து இருக்கின்றனர். அண்ணாமலை கோவையில் என்ன செய்கின்றார் என்பதுதான் அனைவரின் பேச்சாகவும் இருக்கின்றது. என்னுடைய வளர்ச்சிக்கு காரணமே என்னுடைய பேச்சுதான். ஸ்டாலின் என் மீதும், இபிஎஸ் மீதும் வழக்குகள் போட்டிருக்கின்றார். இது எங்களுடைய தைரியமான செயல்பாட்டை காட்டுகிறது.
சௌமியா அன்புமணி வாரிசு அரசியலில் வரமாட்டார். அவருக்கு தகுதி இருப்பதாக பார்க்கிறேன். பசுமை இயக்கத்திற்கு வேலை செய்து இருக்கிறார்கள். அவர்களை வாரிசு அரசியலுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது.
இந்தியா முழுவதும் 51 சதவீத வாக்குகளை பா.ஜ.க பெறும். கோவை பாராளுமன்றத் தொகுதியில் 60 சதவீத வாக்குகள் பா.ஜ.கவிற்கு கிடைக்கும். களத்தில் அதற்காக நண்பர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். கோவை அரசியல் களம் சிறப்பாக இருக்கிறது. வேட்புமனு தாக்கலுக்கு பின்பு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கின்றேன்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.