மதுபான ஊழல் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த 21-ம் தேதி கைது செய்தது. தொடர்ந்து அவரை 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே கைது செய்யப்பட்டதை எதிர்த்து ,கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதே சமயம், கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும், அவரே டெல்லியின் முதல்வராக தொடர்ந்து நீடிப்பார் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
ஊழல் வழக்கில் கைதாகியுள்ள கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வலியறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.
இந்த நிலையில், டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா டெல்லியில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘‘சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும்’’ என்று தெரிவித்துள்ளார்.