சந்தேஷ்காளி கிராமத்தைச் சேர்ந்த பெண் வேட்பாளருடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நம்பிக்கை தரும் வார்த்தைகளைப் பேசி சக்தியின் வடிவம் என புகழாரம் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கம், சந்தேஷ்காளி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ரேகா பத்ராவை பாசிர்ஹட் மக்களவைத் தொகுதி வேட்பாளராக பாஜக அறிவித்திருந்த நிலையில், அப்பெண்ணுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் நேற்று (மார்ச் 26) கலந்துரையாடினார். அவரை சக்தியின் வடிவம் எனவும் பிரதமர் பாராட்டினார்.
மேற்குவங்க மாநிலம், சந்தேஷ்காளி கிராமத்தில் நில அபகரிப்பு, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இழைத்தல் உட்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியான ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சந்தேஷ்காளி பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பாஜக போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்த சம்பவம் மிகப்பெரிய போராட்டமாக மாறிய பின்னர் வேறு வழியின்றி மம்தா பானர்ஜி அரசு குற்றவாளி ஷாஜகான் ஷேக்கை கைது செய்தது. தற்போது அவர் சிபிஐ கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளார்
மேலும், சந்தேஷ்காளி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ரேகா பத்ரா என்ற பெண்ணை பாசிர்ஹட் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக கடந்த ஞாயிறு அன்று பாஜக அறிவித்தது.
இந்த நிலையில், பாஜக வேட்பாளர் ரேகா பத்ராவிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் நேற்று (மார்ச் 26) கலந்துரையாடினார். அப்போது தேர்தல் பிரச்சாரம் ,மக்கள் ஆதரவு குறித்து பிரதமர் அவரிடம் கேட்டறிந்தார். மேலும் அவரை சக்தியின் வடிவம் எனவும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமருடனான உரையாடல் குறித்து ரேகாபத்ரா கூறியதாவது:
துணிச்சலான மற்றும் தன்னம்பிக்கையான வார்த்தைகளை கூறிய பிரதமர் மோடிக்கும் வேட்பாளராக தேர்வு செய்த பாஜகவுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சந்தேஷ்காளி மக்கள் எனக்கு துணையாக நிற்கின்றனர். நான் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண் எனது கணவர் கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பணியாற்றி வருகிறார். வெளி மாநிலங்களுக்கு செல்லாமல் இப்பகுதி மக்கள் இங்கேயே பணியாற்றுவதற்கான வசதிகளை செய்து தர நான் முயற்சிகள் மேற்கொள்வேன் என்றார்.