தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் ரூ 294 ல் இருந்து ரூ.319 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்குவதற்காக 2006ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. 100 நாள் வேலை என பொதுமக்களால் பரவலாக அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை மத்திய அரசு தற்போது அதிகரித்துள்ளது.
இந்த திட்டத்தின் பணியாளருக்கான ஊதிய விகிதத்தை மத்திய அமைச்சகம் தொழிலாளர்கள் ஊதிய சட்டம் பிரிவு 6(c)-ன் கீழ் அவ்வப்போது நிர்ணயம் செய்து வருகிறது.
இந்த நிலையில் 100 நாள் வேலைக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்திற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் 100 நாள் வேலைக்கான ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் நாளொன்றுக்கு தற்போது ரூ.294 வழங்கப்படும் நிலையில் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய ஊதிய விவரங்களின்படி அதிகபட்சமாக அரியானா, சிக்கிம் மாநிலங்களில் ரூ.374 ஆக உயர்ந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கிராமப் பொருளாதாரத்தை உயர்த்துவதில் என்றுமே பாஜக அரசு முனைப்பாக செயல்பட்டு வருகிறது,அதன் ஒரு பகுதியாகவே இந்த ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் ,கிராமப்புற மக்களுக்கு எப்போதுமே துணை நிற்பது பாஜக அரசுதான் என்றும் மக்கள் பேசிவருகின்றனர். இந்த ஊதிய உயர்வு அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.